திருட்டு வழக்கில் வாலிபருக்கு 2 ஆண்டு சிறை பத்ராவதி கோர்ட்டு தீர்ப்பு
திருட்டு வழக்கில் வாலிபருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி பத்ராவதி கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
சிவமொக்கா-
திருட்டு வழக்கில் வாலிபருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி பத்ராவதி கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
திருமணம் நிகழ்ச்சிக்காக...
சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா நாகத்தி பௌகளு பகுதியை சேர்ந்தவர் கணேஷ் நாயக். இவர் கடந்த 2019-ம் ஆண்டு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் பத்ராவதியில் நடந்த திருமண நிகழ்ச்சிக்காக சென்றார். இதனை அறிந்த மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று தங்க நகை, ரூ.6 ஆயிரம் ரொக்கத்தை திருடிவிட்டு சென்றனர். பின்னர் வீடு திரும்பிய கணேஷ் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்றபோது பீரோ உடைக்கப்பட்டு 8 கிராம் தங்க நகை, ரூ.6 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடிவிட்டு சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து பத்ராவதி புறநகர் போலீசில் கணேஷ் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அவர்கள் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி களை ஆய்வு செய்து வந்தனர். மேலும் மர்மநபர்களை பிடிப்பதற்கு தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் மர்மநபர்களை தேடி வந்தனர். இந்தநிலையில் கணேஷ் வீட்டில் நகை, பணத்தை திருடியதாக அதேப்பகுதியை சேர்ந்த மகேஷ் (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
2 ஆண்டு சிறை
இதுதொடர்பான வழக்கு பத்ராவதி கோர்ட்டில் நடந்து வந்தது. போலீசார் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து நீதிபதி மிலனா நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கினார்.
அதில், மகேஷ், நகை, பணத்தை திருடியது உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.