தொங்கு பாலத்தில் காரை ஓட்டி சென்ற வாலிபர்கள்
ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு உள்ள தொங்கு பாலத்தில் காரை ஓட்டி சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
கார்வார்:-
உத்தர கன்னடா மாவட்டம் எல்லாப்பூர், ஜோய்டா தாலுகாக்களின் எல்லையில் சிவபுரா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஓடும் காளி ஆற்றின் குறுக்கே தொங்கு பாலம் உள்ளது. இந்த தொங்கு பாலத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்த நிலையில் அந்த தொங்கு பாலத்திற்கு மராட்டியத்தை சேர்ந்த சில வாலிபர்கள் காரில் சுற்றுலா வந்தனர். பின்னர் அந்த வாலிபர்கள் காரை தொங்கு பாலத்தில் ஓட்டி சென்றனர். இதற்கு சில சுற்றுலா பயணிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால் எதிர்ப்பு தெரிவித்தவர்களை வாலிபர்கள் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு குவிந்த உள்ளூர் மக்கள் வாலிபர்களை திட்டினர். இதனால் வேறு வழியின்றி வாலிபர்கள் காரை பின்நோக்கி எடுத்து சென்றனர். தொங்கு பாலத்தில் வாலிபர்கள் காரை ஓட்டி வந்த காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. அந்த வீடியோவை பார்ப்பவர்கள் வாலிபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் குஜராத்தில் மோர்பி என்ற பகுதியில் ஆற்றின் குறுக்கே உள்ள தொங்கு பாலம் அறுந்து விழுந்து 141 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.