வாகன பணிமனையில் பயங்கர 'தீ'
உப்பள்ளியில் வாகன பணிமனையில் பயங்கர 'தீ' விபத்து ஏற்பட்டது.
உப்பள்ளி-
தார்வார் மாவட்டம் உப்பள்ளி அருகே கார்வார் ரோட்டில் துர்கா பார் அமைந்துள்ளது. அதன் அருகே வாகன பணிமனை ஒன்று அமைந்திருக்கிறது. நேற்று முன்தினம் மாலையில் வேலை முடிந்து அங்கிருந்து ஊழியர்கள் அனைவரும் சென்றுவிட்டனர். பின்னர் உரிமையாளரும் வாகன பணிமனையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் இரவில் திடீரென வாகன பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 2 கார்களில் தீப்பிடித்தது. அதைப்பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசார், தீயணைப்பு படையினர் மற்றும் வாகன பணிமனை உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த போலீசார் தீயணைப்பு படையினருடன் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து கார்களில் பிடித்து எரிந்த தீயை அணைத்தனர். இருப்பினும் 2 கார்களும் தீவிபத்தில் முற்றிலும் சேதம் அடைந்தது. இதனால் ரூ.8 லட்சம் அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி பழைய உப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.