சார்மடி மலைப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ
மூடிகெரே அருகே சார்மடி மலைப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இதில் 20 ஏக்கர் செடி- கொடிகள் எரிந்து நாசமாகின.
சிக்கமகளூரு-
சார்மடி மலைப்பகுதி
சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகாவில் சார்மடி மலைப்பகுதி உள்ளது. சுற்றுலா தலமாக திகழ்ந்து வரும் இந்த மலைப்பகுதிக்கு மாநிலத்தில் பல்வேறு இடங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக மலையேற்றத்தில் ஆர்வம் உள்ளவர்கள் இந்த சார்மடியை தேர்வு செய்வார்கள். அந்த அளவிற்கு இந்த சார்மடி மலைப்பகுதியில் இயற்கை காட்சிகள் கொட்டி கிடக்கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் சார்மடி மலையில் திடீரென்று காட்டுத்தீ பிடித்தது. கொழுந்து விட்டு எரிந்த தீ மூலிகை செடிகள், மரங்கள், செடி, கொடிகளில் பிடித்து பயங்கரமாக எரிந்தது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீ விபத்து
இதையடுத்து தீயணைப்பு படையினருடன் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறை அதிகாரிகள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 20-க்கும் அதிகமான ஊழியர்கள் இந்த பணிகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. காட்டுத்தீ அடுத்தடுத்து பரவியதால் முற்றிலும் தீயை கட்டுக்குள் கொண்ட வர முடியவில்லை. இதனால் தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். தீ விபத்தில் 20-க்கும் மேற்பட்ட ஏக்கரில் வனப்பகுதி நாசமானது. அதில் அரிய வகை மூலிகை செடிகள், மரங்கள், கொடிகளும் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.
மேலும் பறவைகள், சிறிய விலங்குகளும் தீயில் கருகியதாக வனத்துறையினர் கூறியுள்ளனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், சிகரெட் பிடித்து யாரேனும் தீைய அணைக்காமல் வனப்பகுதியில் வீசியிருக்கலாம் என்றும், காய்ந்த இலைகளில் அந்த சிகரெட் தீ பட்டு தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறினர். இதுபற்றி வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
காபி தோட்டத்தில்
அதேபோல் சிக்கமகளூரு அருகே உள்ள அவதி கிராமத்தில் குமார் என்பவருக்கு சொந்தமான காபி தோட்டம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த தீ அருகே உள்ள காபி தோட்டத்திற்கும் பரவியது. தீ கொழுந்து விட்டு எரிந்ததால் அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் 3 மணி நேரம் போராடி தீயை முற்றிலுமாக தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். தீ விபத்தில் 2 ஏக்கர் காபி செடிகள் முற்றிலும் எரிந்து நாசமானது. இதில் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக விவசாயி தெரிவித்தார். இதற்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என அரசுக்கு விவசாயி கோரிக்கை விடுத்துள்ளார்.