சிக்கமகளூரு இந்தாவரா வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ
சிக்கமகளூரு அருகே இந்தாவரா வனப்பகுதியில் பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டது. இதில் 2 ஏக்கர் செடி- கொடிகள் எரிந்து நாசமாகின.
சிக்கமகளூரு-
வனப்பகுதியில் காட்டுத்தீ
சிக்கமகளூரு (மாவட்டம்) தாலுகா அருகே இந்தாவரா கிராமம் உள்ளது. இந்தகிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்தாவரா வனப்பகுதியில் திடீரென காட்டுத் தீ பிடித்து எரிந்தது. அப்பகுதியை சேர்ந்தவர்கள் தீ அணைக்க முயன்றனர். ஆனால் தீ அடுத்தடுத்து பரவியதால் அவர்களால் அணைக்க முடியவில்லை. உடனே அவர்கள் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். தீயணைப்பு வாகனம் செல்ல முடியாத நிலையில், சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்களுடன் இணைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் தீ கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது.
அணைக்கும் பணி தீவிரம்
இதையடுத்து தொடர்ந்து தீயை அணைப்பு வீரர்கள், தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் வெயில் நேரம் என்பதால், அந்த தீ கட்டுக்குள் வராமல் பிறப்பகுதிகளுக்கு பரவி வருவதாக கூறப்படுகிறது. இதனால் முற்றிலும் அந்த தீயை அணைக்க முடியவில்லை. மேலும் ஒரு நாள் பணியில் ஈடுபட்டால் மட்டுமே இந்த தீயை அணைக்க முடியும் என்று கூறப்படுகிறது. இதனால் தொடர்ந்து அந்த தீயை அணைக்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதற்காக 30-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த தீ விபத்தில் வனப்பகுதியில் இருந்த 2 ஏக்கர் பரப்பளவிலான மரம், செடி-கொடிகள் எரிந்து நாசமாகின என கூறப்படுகிறது. ஆனாலும் இந்த தீ விபத்தில் வனவிலங்குகள் உயிரிழந்து உள்ளதா என்பது தெரியவில்லை.
அதே நேரம் தீ விபத்திற்கான உண்மையான காரணம் தெரியவில்லை. கடும் வெயில் அல்லது மர்ம நபர்கள் யாரேனும் வனப்பகுதிக்கு தீ வைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.