துரஹள்ளி வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ
பெங்களூருவில் துரஹள்ளி வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதனால் 25 ஏக்கரில் மரம், செடி-கொடிகள் எரிந்து நாசமாகி உள்ளது.
பெங்களூரு:-
வனப்பகுதியில் காட்டுத்தீ
கோடை காலம் நெருங்கி வருவதால் கர்நாடகத்தில் உள்ள வனப்பகுதியில் அடிக்கடி காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது. இதனால் மரம், செடி-கொடிகள் மற்றும் மூலிகை செடிகளும் எரிந்து நாசமாகின்றன. வனவிலங்குகளும் காட்டுத்தீயில் சிக்கி இரையாகின்றன. இந்த நிலையில் பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரையொட்டி உள்ள துரஹள்ளி வனப்பகுதியிலும் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
அதாவது நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் துரஹள்ளி வனப்பகுதியில் திடீரென்று தீப்பிடித்து எரிய தொடங்கியது. அந்த தீ, மளமளமவென மரம், செடி-கொடிகளில் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப்பகுதி மக்களும், வனக்காவலர்களும் காட்டுத்தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அங்கு அடர்ந்த புகை சூழ்ந்து கொண்டதால் அவர்களை தீயை அணைக்க முடியவில்லை.
25 ஏக்கர் எரிந்து நாசம்
இதையடுத்து கக்கலிபுரா, கே.ஆர்.புரம் பகுதியில் இருந்து வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் துரஹள்ளி வனப்பகுதிக்கு விரைந்து வந்து வந்தனர். அவர்கள், வனப்பகுதியில் பிடித்து எரிந்த தீயை
தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைக்க முயன்றனர். சுமார் 3 மணி நேர போராட்டத்துக்கு பிறகு இரவு 9 மணி அளவில் காட்டுத்தீ கட்டுக்குள் கொண்டு முற்றிலும் அணைக்கப்பட்டது.
ஆனாலும் வனப்பகுதியில் சுமார் 25 ஏக்கரில் மரம், செடி-கொடிகள் மற்றும் மூலிகை தாவரங்கள் எரிந்து நாசமாகின. மேலும் துரஹள்ளி வனப்பகுதியில் ஏராளமான மான்கள் வசித்து வருவதால், அவை காட்டுத்தீயில் சிக்கி இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
வனத்துறையினர் விசாரணை
துரஹள்ளி வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. யாரேனும் மர்மநபர்கள் வனத்துக்கு தீ வைத்திருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகிக்கிறார்கள். இதுதொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த ஆண்டும் இதேபோல், துரஹள்ளி வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகத்தில் கடந்த பிப்ரவரி 15-ந்தேதி முதல் கடந்த 5-ந்தேதி வரை 2,000-க்கும் மேற்பட்ட காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகி உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.