மதுபோதை தகராறில் பயங்கரம் மனைவி கழுத்து அறுத்துக்கொலை
மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பெங்களூரு:
மதுஅருந்தும் பழக்கம்
பெங்களூரு புறநகர் நெலமங்களா தாலுகா சாந்திநகர் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 45). தொழிலாளி. இவரது மனைவி மஞ்சுளா (35). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சிவக்குமாருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. தினமும் அவர் மதுஅருந்திவிட்டு வீட்டிற்கு வந்து மனைவி மஞ்சுளாவிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் சிவக்குமாா் மதுஅருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
மேலும் அவர் மஞ்சுளாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த சிவக்குமார் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து மஞ்சுளாவின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் மஞ்சுளா ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்தார். இதற்கிடையே சிவக்குமார் வீட்டில் இருந்து தப்பி ஓடி தலைமறைவானார். அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து நெலமங்களா புறநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீஸ் விசாரணை
அந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் மஞ்சுளாவின் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சிவக்குமார் மதுபழக்கத்திற்கு அடிமையானவர் என்பதும், மதுஅருந்திவிட்டு மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் அவர் கத்தியால் மஞ்சுளாவை கொலை செய்ததும் தெரியவந்தது. தலைமறைவாக உள்ள சிவக்குமாரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.