பயங்கரவாதி ஷாரிக் வெடிகுண்டு பயிற்சி பெற்ற துங்கா ஆற்றங்கரையில் சோதனை என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி
துங்கா ஆற்றங்கரையில் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து ஷாரிக் பயிற்சி பெற்ற விவகாரம் தொடர்பாக அங்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சிவமொக்கா-
துங்கா ஆற்றங்கரையில் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து ஷாரிக் பயிற்சி பெற்ற விவகாரம் தொடர்பாக அங்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதுமட்டுமின்றி இவ்வழக்கு தொடர்பாக மேலும் ஒருவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
பயங்கரவாதி ஷாரிக்
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு டவுன் நாகுரி பகுதியில் கடந்த ஆண்டு(2022) நவம்பர் மாதம் 19-ந் தேதி ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்ட குக்கர் வெடிகுண்டு வெடித்தது. இதில் ஆட்டோவில் பயணித்து வந்த ஷாரிக் என்ற முகமது ஷாரிக்(வயது 25), ஆட்டோ டிரைவர் புருஷோத்தம் ஆகிய 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.
முதலில் ஆட்டோ வெடித்து சிதறியதாக கருதப்பட்டது. பின்னர் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் ஆட்டோவில் கொண்டுவரப்பட்ட குக்கர் வெடிகுண்டு வெடித்திருந்தது தெரியவந்தது. அதாவது சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி தாலுகா சொப்புகுட்டே கிராமத்தைச் சேர்ந்த ஷாரிக், பயங்கரவாதி என்பதும், அவர் கர்நாடகத்தில் பல்வேறு இடங்களில் பயங்கரவாத சம்பவங்களை நிகழ்த்த திட்டமிட்டு வந்ததும், இதற்காக அவர் பயிற்சி பெற்று இருந்ததும், அவரே குக்கர் வெடிகுண்டு தயாரித்து இருந்ததும் தெரியவந்தது. மேலும் அவர் அந்த குக்கர் வெடிகுண்டை நாகுரி பகுதியில் வைக்க ஆட்டோவில் எடுத்துச் சென்றபோது உராய்வு ஏற்பட்டு வெடித்திருந்ததும் தெரியவந்தது.
கைது
அதையடுத்து ஷாரிக்கை போலீசார் கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ.) வசம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பேரில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஷாரிக்கை தங்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. அதாவது ஷாரிக், தனது நண்பர்களான மாஸ் முனீர், சதாத் உசேன் ஆகியோருடன் சேர்ந்து துங்கா நதிக்கரையில் வெடிகுண்டுகளை தயாரித்து வெடிக்க செய்து பயிற்சி பெற்றதும், தனது நண்பர்கள் மூலமாக பயங்கரவாத அமைப்புக்கு ஆள்சேர்க்க திட்டமிட்டு அதற்கான பணிகளையும் செய்து வந்ததும் தெரியவந்தது.
மேலும் ஷாரிக் வெடிகுண்டு தயாரிக்கும் பயிற்சி பெறவும், பயங்கரவாத அமைப்புக்கு ஆள்சேர்க்கவும் தமிழ்நாட்டில் உள்ள கோவை உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று அங்குள்ள பயங்கரவாதிகளை சந்தித்து அவர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டதும் தெரியவந்தது.
பரபரப்பு
இந்த வழக்குகள் ஒருபுறம் இருக்க துங்கா ஆற்றங்கரையில் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து பயிற்சி பெற்றது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஷாரிக் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம் துங்கா நதிக்கரையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மேலும் சிவமொக்கா டவுன் டேங்க் மொகல்லா பகுதியில் வசிக்கும் ஒருவரை பிடித்து விசாரணைக்கு உட்படுத்தினர். மேலும் அவரை கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அவரிடம் இருந்து ஒரு செல்போன், ஒரு சிம்கார்டு ஆகியவற்றை என்.ஐ.ஏ. அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் இதுதொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.