40 சதவீத கமிஷன் விவகாரத்தில் காங்கிரஸ் ஆதரவு ஒப்பந்ததாரர்களின் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது- முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை


40 சதவீத கமிஷன் விவகாரத்தில் காங்கிரஸ் ஆதரவு ஒப்பந்ததாரர்களின் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது-  முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை
x

40 சதவீத கமிஷன் விவகாரத்தில் காங்கிரஸ் ஆதரவு பெற்ற ஒப்பந்ததாரர்களின் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

பெங்களூரு: 40 சதவீத கமிஷன் விவகாரத்தில் காங்கிரஸ் ஆதரவு பெற்ற ஒப்பந்ததாரர்களின் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

கர்நாடக சட்டசபை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்ட பிறகு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

உண்மை தெரியும்

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களை உள்ளடக்கிய புத்தகத்தையே நாங்கள் வெளியிட்டுள்ளோம். அவர்களே ஊழல்வாதிகளாக இருக்கும்போது, ஊழலுக்கு எதிராக இயக்கம் நடத்துகிறார்களாம். எந்த இயக்கத்தை வேண்டுமானாலும் அவர்கள் நடத்தட்டும். ஆனால் இறுதியில் உண்மைக்கு வெற்றி கிடைக்கும்.

எந்த விதமான ஆதாரமும் இல்லாமல் எனது அரசுக்கு எதிராக காங்கிரசார் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறுகிறார்கள். இது நீண்ட காலம் நீடிக்காது. ஒப்பந்ததாரர்கள் கூறிய கமிஷன் குற்றச்சாட்டுக்கு நாங்கள் பதிலளித்துள்ளோம். ஒரு பொய்யை திரும்ப சொன்னால் அது உண்மையாகிவிடும் என்று காங்கிரசார் நம்புகிறார்கள். ஆனால் மக்களுக்கு உண்மை என்னவென்று தெரியும்.

விவாதித்து இருக்கலாம்

ஒப்பந்ததாரர்கள், யாருக்கு கமிஷன் வழங்கினர் என்பது குறித்து ஆதாரத்துடன் புகார் கூறினால் அதுபற்றி லோக்அயுக்தா மூலம் விசாரணை நடத்தப்படும். 40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டு குறித்து சட்டசபையில் விவாதிக்க நாங்கள் தயாராக இருந்தோம். கடைசி நாளில் இந்த விவகாரத்தை அவர்கள் கையில் எடுத்தனர். முன்கூட்டியே அதுபற்றி விவாதித்து இருக்கலாம்.

காங்கிரசின் ஆதரவு பெற்ற ஒப்பந்ததாரர்களின் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது. ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் கெம்பண்ணா, கமிஷன் குற்றச்சாட்டுக்கு இதுவரை ஒரு சிறிய ஆதாரத்தை கூட வழங்கவில்லை. அந்த கெம்பண்ணா மீது மந்திரி முனிரத்னா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுவரை அவர் கோர்ட்டில் எந்த ஆதாரத்தையும் தாக்கல் செய்யவில்லை.

நியமன முறைகேடு

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நியமன முறைகேடு குறித்து காங்கிரசார் பிரச்சினை கிளப்பினர். அதற்கு நாங்கள் தக்க பதில் கொடுத்தோம். மந்திரிசபை விரிவாக்கம் குறித்து கட்சி மேலிடத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதற்கு விரைவில் அனுமதி அளிப்பதாக உறுதி அளித்துள்ளனர். சட்டசபை கூட்டத்தொடருக்காக காத்திருந்தோம். மேலிட தலைவர்கள் என்னை அழைத்து பேசியவுடன் மந்திரிசபை விரிவாக்கம் விரைவாக மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story