கட்சி தாவல் தடை சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும்; சித்தராமையா வலியுறுத்தல்


கட்சி தாவல் தடை சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும்; சித்தராமையா வலியுறுத்தல்
x

கட்சி தாவல் தடை சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.

மைசூரு;

சித்தராமையா பேட்டி

மைசூரு புறநகர் பகுதி வரகோடு என்னுமிடத்தில் காங்கிரஸ் கட்சியின் புதிய சிந்தனை முகாம் நடந்தது. இதில் முன்னாள் முதல்-மந்திரியும், எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா கலந்துகொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் பிறந்த ஆபரேஷன் தாமரை மற்ற மாநிலங்களிலும் பரவி கொண்டிருக்கிறது. அதன்படி தற்போது மராட்டியத்தில் பா.ஜனதாவின் ஆபரேஷன் தாமரை நடக்கிறது.

ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும்

கட்சி தாவல் தடை சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். ஒரு கட்சியில் இருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மற்றொரு கட்சிக்கு செல்வதை தடுக்க வேண்டும். ஒருவேளை கட்சி தாவி ஏற்கனவே இருந்த கட்சிக்கு துரோகம் விளைவித்தால் அப்படிப்பட்டவர்களை 10 ஆண்டுகள் வரை தேர்தலில் போட்டியிடாத மாதிரி சட்டம் கொண்டு வரவேண்டும். இதன்மூலம் நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும்.

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் அமல்படுத்திய திட்டங்களையே பா.ஜனதா அரசு கொண்டுவருகிறது. கர்நாடகம் வந்த பிரதமர் மோடியிடம், கோரிக்கை மனுவை பா.ஜனதாவினர் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஏனென்றால் பிரதமர் மோடியிடம் ஒரு கோரிக்கை வைத்தால் அதனை நிறைவேற்றமாட்டார் என்று இங்குள்ள பா.ஜனதாவினருக்கு நன்கு தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story