திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது..!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா இன்று (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலையப்பர், விஸ்வகேசவர் முன்னிலையில், கோவிலில் உள்ள தங்க கொடி மரத்தில் புதிதாக கொண்டு வரப்பட்ட தர்பை மற்றும் சணல் கயிற்றால் கருடன் சின்னம் பொறித்த கொடி மேளதாளங்கள் முழங்க ஏற்றப்பட்டது.
பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு இன்று இரவு 9 மணிக்கு ஏழுமலையான் பெரிய சேஷ வாகனத்தில் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். திருப்பதி முழுவதும் வண்ண மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு உள்ளதால் பிரம்மோற்சவ விழா களைகட்டி உள்ளது. பக்தர்களுக்கு தேவையான உணவு குடிநீர் மருத்துவ வசதி உள்ளிட்ட ஏற்பாடுகளை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் செய்துள்ளனர்.
பிரம்மோற்சவ விழா நடைபெறும் 9 நாட்களும் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. திருப்பதி அலிபிரி நடைபாதையில் செல்லும் பக்தர்கள் வனவிலங்குகளிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள தேவஸ்தானம் சார்பில் வழங்கப்படும் கம்புகளை எடுத்துச் செல்கின்றனர். மேலும் குழந்தைகளுடன் செல்லும் பக்தர்களுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட விதிமுறைகள் தொடர்ந்து நடைமுறையில் உள்ளது.
பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருப்பதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் 2 ஆயிரம் கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகள் ஈடுபட்டு வருகின்றனர்.