பா.ஜனதாவினரை விரட்டி விரட்டி கொட்டிய தேனீக்கள்


பா.ஜனதாவினரை விரட்டி விரட்டி கொட்டிய தேனீக்கள்
x
தினத்தந்தி 9 Sept 2023 12:15 AM IST (Updated: 9 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

போராட்டம் நடத்திய பா.ஜனதாவினரை தேனீக்கள் விரட்டிவிரட்டி கொட்டின. இதில் எம்.பி. உள்பட 20 பேர் காயம் அடைந்தனர். இதனால் கோலார் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கோலார்

பா.ஜனதாவினர் போராட்டம்

காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டதை கண்டித்தும், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காததை கண்டித்தும், கர்நாடக காங்கிரஸ் அரசின் விவசாய விரோத போக்கை கண்டித்து நேற்று மாநிலம் தழுவிய அளவில் பா.ஜனதா போராட்டம் நடத்தியது.

அதுபோல் கோலார் மாவட்டத்திலும் பா.ஜனதாவினர் போராட்டம் நடத்தினர். கோலார் தொகுதி எம்.பி. முனிசாமி தலைமையில் கோலார் கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம் நடந்தது.

இதில் பா.ஜனதாவினர், இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் என நூற்றுக்கணக்கானோர் கூடியிருந்தனர்.

தேனீக்கள் விரட்டி, விரட்டி கொட்டின

அவர்கள் கர்நாடக காங்கிரஸ் அரசை கண்டித்தும், முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பிய படி இருந்தனர்.

அந்த சமயத்தில் திடீரென்று கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மரத்தில் இருந்த தேனீக்கூட்டில் இருந்து திடீரென்று தேனீக்கள் கலைந்து பறந்து வந்தன.

போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதாவினரை தேனீக்கள் கொட்டத் தொடங்கின. இதனால் எம்.பி. உள்பட அனைவரும் தேனீக்களிடம் இருந்து தப்பிக்க ஓட்டம் பிடித்தனர்.

பலரும் தாங்கள் கழுத்தில் அணிந்திருந்த துண்டுகளை தலையில் முக்காடு போல் போட்டு மூடினர். இருப்பினும் தேனீக்கள் விரட்டி, விரட்டி அவர்களை கொட்டின.

இதனால் போராட்டக்காரர்களும், பாதுகாப்பு பணிக்கு வந்த போலீசாரும் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

எம்.பி. உள்பட 20 பேருக்கு சிகிச்சை

தேனீக்கள் கொட்டியதில் முனிசாமி எம்.பி., கட்சி தொண்டர்கள், போலீசார் என 20-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர்.

உடனே அவர்கள் கோலார் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அனைவரும் வீடு திரும்பினர்.

இதற்கிடையே கோலார் கலெக்டர் அலுவலகத்தில் உலா வந்த தேனீக்கள் சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு அங்கிருந்து பறந்து சென்றுவிட்டன.

இந்த சம்பவத்தால் நேற்று கோலார் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story