ஆட்சியை கவிழ்க்க ரூ.17 கோடியுடன் பேரம் பேசிய பா.ஜனதாவினர்:-குமாரசாமி பேட்டி
ஆட்சியை கவிழ்க்க ரூ.17 கோடியுடன் பா.ஜனதாவினர் பேரம் பேசினர் என்று குமாரசாமி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு: முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-பா.ஜனதாவினர் பாவத்தால் சம்பாதித்த பணத்தை கொண்டு கர்நாடகத்தில் எனது தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) ஆட்சியை கவிழ்த்தனர். இதே போல் பிற மாநிலங்களில் பாவத்தின் பணத்தை கொண்டு எதிர்க்கட்சிகளின் ஆட்சியை கவிழ்த்தனர்.
இப்போது தெலுங்கானாவில் சந்திரசேகர்ராவ் ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா முயற்சி செய்து வருகிறது. அந்த மாநிலத்தில் அவ்வளவு சுலபமாக அங்குள்ள பி.ஆர்.எஸ். கட்சியின் ஆட்சியை கவிழ்க்க முடியாது. இன்று (நேற்று) ரூ.17 கோடி பணத்துடன் பா.ஜனதாவினர் பேரம் பேசும்போது சிக்கியுள்ளனர். இதுகுறித்து பிரதமர் மோடி மவுனமாக இருப்பது ஏன்?. பிரதமரும், அமலாக்கத்துறையினரும் இதற்கு பதிலளிக்க வேண்டும். அந்த பணம் எங்கிருந்து எப்படி வந்தது என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இத்தகைய நடவடிக்கைகள் ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. அரசியல் சாசனத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. பா.ஜனதா செல்லும் பாதை சரியானது அல்ல. இத்தகைய முயற்சி அந்த கட்சியையே திருப்பி தாக்கும்.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.