காங்கிரஸ் பாதயாத்திரை நடந்த இடங்களில் பா.ஜனதா வெற்றி பெறும் - கர்நாடக பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல்
காங்கிரஸ் பாதயாத்திரை நடந்த இடங்களில் பா.ஜனதா வெற்றி பெறும் என்று நளின் குமார் கட்டீல் தெரிவித்துள்ளார்.
கொள்ளேகால்:
சாம்ராஜ்நகர் மாவட்டம் அம்பேத்கர் பவனில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பா.ஜனதாவின் ஜனசங்கல்ப யாத்திரையை தொடங்கி வைத்து கட்சியின் மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் பேசியதாவது:-
காந்தி குடும்பத்தின் பெயரில் காங்கிரஸ் செயல்பட்டு வந்தது. ஆனால் தற்போது மாற்றம் நடந்துள்ளது. இதற்கு காரணம் பிரதமர் மோடியின் செல்வாக்கு. காங்கிரஸ் ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் மக்களின் கவனத்தை ஈர்த்து வருவதாக கூறுகின்றனர்.
இது பாரத் ஜோடோ யாத்திரை இல்லை. பாரத் ஓடோ யாத்திரை. பாதயாத்திரை என்ற பெயரில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, தான் போட்டியிடும் தொகுதியை தேடி வருகிறார். யார் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் காங்கிரஸ் வெற்றி பெறாது. காங்கிரஸ் பாதயாத்திரை நடந்த அனைத்து இடங்களிலும் பா.ஜனதா வெற்றி பெறும். சாம்ராஜ்நகரில் உள்ள 4 தொகுதியிலும் பா.ஜனதா வெற்றி பெறும். இதற்கு தொண்டர்களின் உழைப்பு முக்கியம். அடுத்து வரும் தேர்தலில் பா.ஜனதா நிச்சயமாக 150 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.