நடுக்கடலில் பாறை மீது மோதி படகு மூழ்கியது; 5 மீனவர்கள் பத்திரமாக மீட்பு


நடுக்கடலில் பாறை மீது மோதி படகு மூழ்கியது; 5 மீனவர்கள் பத்திரமாக மீட்பு
x
தினத்தந்தி 7 Jan 2023 12:15 AM IST (Updated: 7 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

உடுப்பியில் மீன்பிடிக்க சென்றபோது நடுக்கடலில் பாறை மீது படகு மோதி மூழ்கியது. இதில் இருந்த 5 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

மங்களூரு:

பாறையில் படகு மோதியது

உடுப்பி மாவட்டம் மல்பே கடற்கரையில் இருந்து அரபிக்கடலில் மீன்பிடிக்க 5 மீனவர்கள் விசைப் படகில் சென்றனர். அவர்கள் சென்ற விசைப்படகு மல்பே கடற்கரையில் இருந்து 8 நாடிக்கல் மைல் தொலைவில் கடலில் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் இருந்த பாறையில் படகு மோதியது.

இதில் படகின் ஒரு பகுதி சேதமடைந்தது. மேலும், கடல்நீர் படகிற்குள் புகுந்தது. இதனால் படகு மூழ்க தொடங்கியது. இதனால் படகில் இருந்த மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் காபு பகுதியில் உள்ள கடலோர காவல்படையினருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் பேரில் கடலோர காவல்படையினர் 2 படகுகளில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

5 மீனவர்கள் மீட்பு

மேலும், அவர்கள் கடலில் மூழ்கி கொண்டிருந்த படகில் இருந்த 5 மீனவர்களை பத்திரமாக மீட்டனர். ேமலும் பாறையில் மோதிய படகை மீட்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டனர். எனினும் சிறிது நேரத்தில் படகு கடலில் மூழ்கியது. படகு மோதிய விவகாரம் குறித்து கடலோர காவல்படையினர் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பாடியனூரை சேர்ந்த பாஸ்கர் என்பவரின் படகில், 5 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றதும், அவர்களது கட்டுப்பாட்டை திடீரென இழந்த படகு பாறையில் மோதி சேதமடைந்து கடலுக்குள் மூழ்கியதும் தெரியவந்தது.

ரூ.30 லட்சம் இழப்பு

இதில் சேதமடைந்த படகில் மீன்பிடிக்க வைத்திருந்த 6 வலைகள், பீப்பாய்கள், 2 ஆயிரம் லிட்டர் டீசல் இருந்ததும், அவை படகுடன் கடலில் மூழ்கியதும் தெரிந்தது. இதன் சேதமதிப்பு ரூ.30 லட்சம் என்று மீனவர்கள் கூறினர்.

மங்களூரு துறைமுகம் அருகே கடந்த ஆண்டு (2022) இரும்பு தாது ஏற்றி வந்த சிரியா நாட்டு கப்பல் ஒன்று தரைதட்டி சேதமடைந்து கடலில் மூழ்கியது. மேலும் அதில் இருந்த 6 ஆயிரம் டன் இரும்பு தாது கடலில் மூழ்கி நாசமானது குறிப்பிடத்தக்கது.


Next Story