பள்ளி விடுதி 2-வது மாடியில் இருந்து குதித்த சிறுவன் சாவு
கதக் அருகே முண்டரகியில் பள்ளி விடுதியின் 2-வது மாடியில் இருந்து குதித்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் இது கொலை என்று அவரது தந்தை குற்றம் சாட்டியிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உப்பள்ளி:-
மாணவன் மர்ம சாவு
கதக் மாவட்டம் முண்டரகி தாலுகா பாச்சாப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். கூலி தொழிலாளி. இவரது மனைவி முத்தவ்வா. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன. இதில் 13 வயது மகனை அவர், முண்டரகியில் உள்ள அரசு பள்ளியில் படிக்க வைத்திருந்தார். இதற்காக அந்த சிறுவன் பள்ளியில் இருந்த விடுதியில் தங்கியிருந்தான்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை விடுதியில் இருந்த சிறுவன் 2-வது மாடியில் இருந்து கீழே குதித்ததாக கூறப்படுகிறது. இதில் சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இது குறித்து அவரது தந்தை சந்திரசேகருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர் விரைந்து சென்று விசாரித்தார். அப்போது பள்ளி நிர்வாகிகள் சிறுவனை உப்பள்ளியில் உள்ள கிம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்திருப்பதாக கூறினர். இதையடுத்து அவர் கிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு வந்து டாக்டர்களிடம் விசாரித்தார். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக டாக்டர்கள் கூறினர். இந்நிலையில் நேற்று முன்தினம் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கொலை என குற்றச்சாட்டு
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சந்திரசேகர் மற்றும் அவரது உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது நிருபர்களுக்கு பேட்டியளித்த சந்திரசேகர் கூறியதாவது:-
என மகன் சாவில் மர்மம் உள்ளது. மாடியில் இருந்து கீழே விழுந்தாலும், குதித்தாலும் கை, காலில் அடிப்படும். ஆனால் என் மகனுக்கு தலையில் மட்டும் அடிப்பட்டுள்ளது. யாரோ அவனை அடித்து கொலை செய்திருக்க கூடும். அவன் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பு இல்லை. இதில் உண்மை மறைக்கப்பட்டுள்ளது. இதில் விடுதி வார்டன் மற்றும் கண்காணிப்பாளர் மீது சந்தேகம் உள்ளது. அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கவேண்டும். அப்போதுதான் உண்மை தெரியவரும். இவ்வாறு அவர் கூறினர். மேலும் இது குறித்து அவர் முண்டரகி போலீசில் புகார் அளித்துள்ளார்.
தீவிர விசாரணை
இந்த புகாரின் ேபரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். முழு விசாரணை முடிந்த பின்னர் இது தற்கொலையா?, கொலையா? என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் உப்பள்ளி கிம்ஸ் ஆஸ்பத்திரியில் சிறுவன் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பள்ளி விடுதியில் சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் முண்டரகி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.