சிறுவனை அடித்து கொன்ற ஆட்கொல்லி புலி கூண்டில் சிக்கியது


சிறுவனை அடித்து கொன்ற  ஆட்கொல்லி புலி கூண்டில் சிக்கியது
x
தினத்தந்தி 21 Sept 2023 12:15 AM IST (Updated: 21 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

எச்.டி.கோட்டை தாலுகாவில் சிறுவனை அடித்து கொன்ற ஆட்கொல்லி புலி வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

எச்.டி.கோட்டை-

எச்.டி.கோட்டை தாலுகாவில் சிறுவனை அடித்து கொன்ற ஆட்கொல்லி புலி வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

சிறுத்தை அட்டகாசம்

மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா கல்லா அட்டி கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்தநிலையில் வனப்பகுதியில் இருந்து காட்டுயானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வெளியேறி கல்லாஅட்டி கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.

இதனால் கிராமமக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இந்தநிலையில், கல்லா அட்டி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ண நாயக். இவரது மகன் சரண் (வயது7). இவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான். இந்தநிலையில் கடந்த 4-ந் தேதி கிருஷ்ண நாயக், தனது மகனுடன் அவரது நிலத்திற்கு சென்றார்.

அடித்து கொன்றது

அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய புலி ஒன்று கிருஷ்ண நாயக்கின் விவசாய நிலத்திற்குள் புகுந்து சிறுவனை அடித்து கொன்றது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர், எச்.டி.கோட்டை போலீசாருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது கிராமமக்கள், அட்டகாசம் செய்து வரும் புலியை பிடிக்க வேண்டும் என வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்தனர்.

அவர்களின் கோரிக்கையை ஏற்று வனத்துறையினர் கல்லாஅட்டி, சித்தாபூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இரும்பு கூண்டை வைத்தனர். புலியை பிடிப்பதற்கு தசரா யானை அர்ஜுனா உள்ளிட்ட 3 யானைகள் கொண்ட குழு புலியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தன.

அர்ஜுனா யானை

இதற்கிடையே தசரா விழாவில் பயிற்சி பெறுவதற்காக அர்ஜுனா மைசூரு அரண்மனை வளாகத்திற்கு சென்றது. இந்தநிலையில் ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில், நேற்றுமுன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து இரைதேடி வெளியே வந்த புலி சித்தாபூர் கிராமத்தில் வைத்திருந்த இரும்பு கூண்டில் சிக்கியது.

இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு கால்நடை டாக்டருடன் வந்தனர். பின்னர் புலியை இரும்பு கூண்டுடன் லாரியில் வனத்துறையினர் ஏற்றி சென்றனர். இதுகுறித்து, வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பிடிபட்டது 8 வயது ஆண் புலியாகும். எச்.டி.கோட்டை தாலுகாவில் உள்ள சொல்லேபுரா, சித்தாபூர் ஆகிய கிராமங்களில் புலி தாக்கி 2 பசுமாடுகள் செத்தன.

தேடுதல் வேட்டை

மேலும், கல்லா அட்டி கிராமத்தில் உள்ள சிறுவனையும் புலி அடித்து கொன்றுள்ளது. இதனால் அட்டகாசம் செய்து வரும் புலியை பிடிப்பதற்கு சித்தாபூர் உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட இடங்களில் இரும்பு கூண்டுகள் வைக்கப்பட்டன. மேலும் 50-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் புலியை பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் சித்தாபூரில் வைக்கப்பட்ட இரும்பு கூண்டில் புலி சிக்கி உள்ளது. சிக்கியது சிறுவனை அடித்து கொன்ற புலிதானா? என்பது தெரியவில்லை. வனப்பகுதியில் உள்ள கண்காணிப்பு பதிவான காட்சிகளை வைத்து சிறுவனை தாக்கிய புலியா? அல்லது வேறு புலியா? என்பது தெரியவரும், என்றார்.


Next Story