செல்போன் எண்ணை 'பிளாக்' செய்ததால் ஆத்திரம்: கள்ளக்காதலியின் குழந்தையை ஏரியில் வீசி கொன்ற வாலிபர்


செல்போன் எண்ணை பிளாக் செய்ததால் ஆத்திரம்: கள்ளக்காதலியின் குழந்தையை ஏரியில் வீசி கொன்ற வாலிபர்
x
தினத்தந்தி 13 March 2023 12:15 AM IST (Updated: 13 March 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

செல்போன் எண்ணை ‘பிளாக்’ செய்ததால் கள்ளக்காதலியின் குழந்தையை ஏரியில் வீசி கொன்ற கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார்.

பாகலூர்:

கள்ளக்காதல்

பெங்களூரு பாகலூர் பகுதியை சேர்ந்தவர் பிரவீன். இவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வந்தார். இவரது வீட்டிற்கு பிரவீனின் நண்பர் சம்பத் என்ற வாலிபர் வந்து சென்றுள்ளார். அப்போது சம்பத்துக்கும், பிரவீனின் மனைவிக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இந்த கள்ளக்காதல் விவகாரம் பிரவீனுக்கு தெரியவந்தது. இதனால் அவர் மனைவியை கண்டித்துள்ளார்.

ஆனால் கள்ளக்காதலை கைவிட அவர் மறுத்ததாக தெரிகிறது. இதையடுத்து பிரவீன் தனது மனைவியை விவாகரத்து செய்தார். இதனால் அந்த பெண், தனது குழந்தையுடன் கோலார் மாவட்டம் தங்கவயல் பகுதியில் சம்பத்துடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.

ஏரியில் வீசி கொலை

இந்த நிலையில் சம்பத்துக்கும், அந்த பெண்ணுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பெண், சம்பத்தை பிரிந்து தனது குழந்தையுடன் மீண்டும் பாகலூர் பகுதிக்கு வந்து குடியேறினார்.

அந்த பெண்ணை, சம்பத் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் சம்பத்தின் செல்போன் எண்ணை அந்த பெண் 'பிளாக்' செய்து இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த சம்பத், சம்பவத்தன்று அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்தார். அப்போது அந்த பெண் வீட்டில் இல்லை. குழந்தை மட்டும் தனியாக இருந்தது. இதையடுத்து அவர், குழந்தையை அங்கிருந்து தூக்கி சென்றார். பின்னர், அருகில் உள்ள ஏரியில் குழந்தையை வீசினார். இதில் அந்த குழந்தை தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தது.

தற்கொலைக்கு முயற்சி

இதற்கிடையே தனது குழந்தையை காணவில்லை என கூறி, அந்த பெண் பாகலூர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே ஏரிக்கரையில் அந்த குழந்தையின் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பேலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கள்ளக்காதலி செல்போன் எண்ணை 'பிளாக்' செய்ததால், அவரது குழந்தையை சம்பத் ஏரியில் வீசி கொன்றது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் சம்பத்தை கைது செய்தனர். அவரும் குழந்தையை ஏரியில் வீசி கொன்றதை ஒப்புக் கொண்டார். கள்ளக்காதலியின் குழந்தையை ஏரியில் வீசி கொன்றதும், சம்பத்தும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால் அங்கிருந்தவர்கள் வரை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று சம்பத் குணமடைந்திருந்தார். இந்த சந்தேகத்தின் பேரில் தான் போலீசார் அவரை பிடித்து விசாரித்தபோது உண்மை தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story