மருத்துவ கல்லூரியை ரத்து செய்தது வேதனை அளிக்கிறது
ராமநகர் மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட மருத்துவ கல்லூரி ரத்து செய்யப்பட்டு இருப்பது வேதனை அளிப்பதாக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:-
ஆஸ்பத்திரி திறப்பு
ராமநகர் மாவட்டம் கனகபுராவில் இன்போசிஸ் சார்பில் 100 படுக்கைகளை கொண்ட ஆஸ்பத்திரி கட்டப்பட்டுள்ளது. அந்த ஆஸ்பத்திரியின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில், சுகாதாரத்துறை மந்திரி சுதாகர், காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பேசியதாவது:-
வேதனை அளிக்கிறது
ராமநகர் மாவட்டத்திற்கு மருத்துவ கல்லூரி வர வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன். அவ்வாறு மருத்துவ கல்லூரி வந்தால், ராமநகர் மாவட்டம் வேகமாக வளர்ச்சி அடையும் என்பதால், இங்கு மருத்துவ கல்லூரி தொடங்க அரசை தொடர்ந்து வலியுறுத்தினேன். அதன்படி, ராமநகர் மாவட்டத்திற்கு மருத்துவ கல்லூரி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பட்ஜெட்டிலும் ராமநகரில் மருத்துவ கல்லூரி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டது. மேலும் மருத்துவ கல்லூரி தொடங்குவதற்கான டெண்டருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
எல்லாம் கைகூடி வரும் நிலையில் ராமநகருக்கு வரவேண்டிய மருத்துவ கல்லூரியை அரசு ரத்து செய்திருக்கிறது. ராமநகருக்கு மருத்துவ கல்லூரி வராமல் போனது மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த வேதனை எனது மனதிற்குள் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. ராமநகருக்கு மீண்டும் மருத்துவ கல்லூரி தொடங்க தேவையான நடவடிக்கை எடுப்பேன். இங்குள்ள அரசு பள்ளிகளில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும். மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது மக்கள் பிரதிநிதியின் கடமை ஆகும்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் பேசினார்.