முதல்-மந்திரி பதவி விவகாரத்தில் காங்கிரஸ் மேலிடம் உரிய முடிவு எடுக்கும்; டி.கே.சிவக்குமார் நம்பிக்கை
முதல்-மந்திரி பதவி விவகாரத்தில் சரியான நேரத்தில் காங்கிரஸ் மேலிடம் உரிய முடிவு எடுக்கும் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
கனகபுராவில் டி.கே.சிவக்குமார்
கர்நாடகத்தில் 135 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. பின்னர் முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமாரையும் காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது. 30 மாதங்களுக்கு பின்பு முதல்-மந்திரி பதவியை சித்தராமையா விட்டு கொடுப்பார் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமார் பதவி ஏற்ற பின்பு முதல் முறையாக தனது சொந்த தொகுதியான ராமநகர் மாவட்டம் கனகபுராவுக்கு நேற்று சென்றிருந்தார். அவருக்கு பிரமாண்ட மாலை அணிவித்தும், திறந்த வாகனத்தில் டி.கே.சிவக்குமாரை அழைத்து சென்றும் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்திருந்தனர். பொதுமக்கள் கூட்டத்தில் டி.கே.சிவக்குமார் பேசியதாவது:-
காங்கிரஸ் மேலிடம் சரியான முடிவு
நான் முதல்-மந்திரி ஆக வேண்டும் என்று நீங்கள் வாக்களித்திருந்தீர்கள். கனகபுரா தொகுதியில் பல ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தேன். எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டசபை தலைவரை தேர்ந்தெடுக்கும் போது அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தியுடன் ஆலோசனை நடத்தி இருந்தேன்.
காங்கிரஸ் மேலிட தலைவர்கள் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன் என்று நான் கூறி இருந்தேன். அதன்படி, முதல்-மந்திரி பதவியை சித்தராமையாவுக்கு விட்டு கொடுத்துள்ளேன். என்றாலும், முதல்-மந்திரி பதவி விவகாரத்தில் சரியான நேரத்தில் காங்கிரஸ் மேலிடம் உரிய முடிவை எடுக்கும். தற்போதைய சூழ்நிலையில் முதல்-மந்திரி சித்தராமையா, மந்திரிகள் ஒற்றுமையாக இருந்து மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம்.
முதல்-மந்திரி பதவி ஆசை
காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்துள்ளது. மாநிலத்தில் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் சக்தி என்ன என்பதை மக்கள் அறிந்து கொண்டுள்ளனர். மக்கள் எதிர்பார்த்தபடி காங்கிரஸ் கட்சி ஆட்சி நடத்தும். மக்களுக்கு கொடுத்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். காங்கிரஸ் கட்சி எப்போதும் சொல்கிறபடி நடந்து கொள்ளும். அதன்படி, தற்போதும் நடந்து கொண்டுள்ளோம். இனிவரும் நாட்களிலும் சிறப்பான ஆட்சியை கொடுப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதன்மூலம் தனது சொந்த தொகுதி மக்கள் முன்னிலையில் முதல்-மந்திரி பதவி மீது இருக்கும் தனது ஆசையை டி.கே.சிவக்குமார் வெளிப்படுத்தி இருக்கிறார். கனகபுரா தொகுதியில் நேற்று பல்வேறு பகுதிகளுக்கு திறந்த வாகனத்தில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் சென்று மக்களை சந்தித்தார்.