லாரி சக்கரத்தில் சிக்கி தம்பதி உடல்நசுங்கி பலி; 3½ வயது குழந்தை உயிர் தப்பியது
கலபுரகியில், லாரி சக்கரத்தில் சிக்கி தம்பதி உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. இதில் அவர்களது 3½ வயது குழந்தை உயிர் தப்பியது.
கலபுரகி:
லாரி மோதி
கலபுரகி டவுன் சிரசகி கிராமத்தைச் சேர்ந்தவர் ரனோஜி(வயது 42). இவரது மனைவி ரேணுகா(35). இந்த தம்பதிக்கு 3½ வயதில் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் ரனோஜி, தனது மனைவி மற்றும் குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார். அவர் டவுன் பகுதியில் உள்ள அதனூர் சந்திப்பு அருகே சென்றார்.
அப்போது அவருக்கு பின்னால் வந்த சரக்கு லாரி, கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் மீது மோதியது. இதில் தம்பதி, லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். எனினும் அவர்களது குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. அந்த பகுதியில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
தம்பதி சாவு
இதற்கிடையே டவுன் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும் தம்பதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தறிகெட்டு ஓடி அவர்கள் மீது மோதியது தெரியவந்தது. இதில் அவர்கள் பரிதாபமாக செத்ததும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்தனர். இந்த விபத்தால் அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.