கால்வாயில் த தம்பதி உடல்கள் மீட்பு
ஒன்னாளி அருகே கால்வாயில் தம்பதியின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் கொலையா, தற்கொலையா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிக்கமகளூரு:
தாவணகெரே மாவட்டம் ஒன்னாளி தாலுகா இரேகெரே கிராமத்தில் கால்வாய் ஒன்று உள்ளது. இந்த கால்வாயில் நேற்றுமுன்தினம் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணின் உடல்கள் மிதந்தது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் ஒன்னாளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்பேரில் போலீசார், தீயணைப்பு படையினருடன் அந்த பகுதிக்கு விரைந்து வந்தனர். பின்னர் தீயணைப்பு படையினர் கால்வாயில் கிடந்த 2 பேரின் உடல்களையும் மீட்டனர். பின்னர் போலீசார் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் ஹரிஹரா தாலுகா ஹாலிவாடா கிராமத்தைச் சேர்ந்த கரிபசப்பா (வயது 45), அவரது மனைவி ரேகா (38) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் கால்வாயில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுகுறித்து ஒன்னாளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.