நாடாளுமன்ற தேர்தல் ஆயத்த பணிகளை தேர்தல் கமிஷன் தொடங்கியது


நாடாளுமன்ற தேர்தல் ஆயத்த பணிகளை தேர்தல் கமிஷன் தொடங்கியது
x
தினத்தந்தி 9 Jun 2023 10:45 PM GMT (Updated: 9 Jun 2023 10:45 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளை தேர்தல் கமிஷன் தொடங்கியது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளை தேர்தல் கமிஷன் தொடங்கியது. நாடு முழுவதும் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களை பரிசோதிக்க தேர்தல் ஒத்திகை நடத்துகிறது.

அடுத்த ஆண்டு ஏப்ரல், ேம மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கு முன்பாக, இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தான், மிசோரம், சத்தீஷ்கார், தெலுங்கானா, மத்தியபிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கிறது.

அத்துடன், வயநாடு (கேரளா), புனே மற்றும் சந்திரபூர் (மராட்டியம்), காசிப்பூர் (உத்தரபிரதேசம்), அம்பாலா (அரியானா) ஆகிய மக்களவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. சில சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்க உள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 5 மாநில சட்டசபை தேர்தல்களுக்கான ஆயத்த பணிகளை தேர்தல் கமிஷன் தொடங்கி உள்ளது. அதற்காக, மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் மற்றும் எந்த சின்னத்தில் ஓட்டு பதிவானது என்பதை உறுதி செய்யும் 'விவிபாட்' எந்திரங்களின் முதல்கட்ட பரிசோதனையை ஆரம்பித்துள்ளது.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தகுதி நீக்கம் ெசய்யப்பட்டதால் காலியாக உள்ள வயநாடு நாடாளுமன்ற தொகுதியில் ஏற்கனவே தேர்தல் ஒத்திகை நடந்து வருகிறது.

அதுபற்றி கேட்டபோது தேர்தல் கமிஷன் அதிகாரி ஒருவர் இத்தகவல்களை தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் மற்றும் 'விவிபாட்' எந்திரங்களின் முதல்கட்ட பரிசோதனை, நாடு தழுவிய நடவடிக்கையாக மேற்கொள்ளப்படுகிறது. இது படிப்படியாக நடத்தப்படும்.

இதன் ஒரு அங்கமாக தேர்தல் ஒத்திகை நடத்தப்படுகிறது. கேரளாவில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் மேற்கொள்ளப்படும்.

சட்டசபை தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களிலும், இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளிலும் மட்டுமின்றி நாடு முழுவதும் தேர்தல் ஒத்திகை நடத்தப்படும். அப்போது பின்பற்ற வேண்டிய நிலையான உத்தரவுகள் மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளன.

மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் மற்றும் 'விவிபாட்' எந்திரங்களின் செயல்பாடுகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் பரிசோதிக்கப்படும். இந்த எந்திரங்களை தயாரித்த 'பெல்', இந்திய மின்னணு கழகம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களின் என்ஜினீயர்கள் பரிசோதித்து பார்ப்பார்கள்.

குறைபாடுடைய எந்திரங்கள், மாற்றித்தருவதற்கோ அல்லது பழுது பார்ப்பதற்கோ அவற்றை தயாரித்த நிறுவனங்களுக்கே திருப்பி அனுப்பி வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story