அமலாக்கத்துறையினர் எனக்கு தொல்லை கொடுக்கிறார்கள்; டி.கே.சிவக்குமார் பேட்டி
அமலாக்கத்துறையினர் எனக்கு தொல்லை கொடுக்கிறார்கள் என்று மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
பெங்களூரு:
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
எதுவும் தெரியாது
என்னுடன் தொழில் ரீதியாக தொடர்பில் உள்ளவர்களை தினமும் அமலாக்கத்துறை, சி.பி.ஐ. அமைப்பால் விசாரணைக்கு அழைக்கப்படுகிறார்கள். வழக்கு ஒன்றில் விசாரணைக்காக 19-ந் தேதி நேரில் ஆஜராகும் ஆஜராகும்படி அமலாக்கத்துறையிடம் இருந்து எனக்கு சம்மன் வந்துள்ளது. இந்த வழக்கு குறித்து ஐகோர்ட்டில் விவரம் கேட்டேன். சி.பி.ஐ. தான் என் மீது வழக்கு பதிவு செய்தது. அமலாக்கத்துறை எதற்காக, ஏன் வழக்கு பதிவு செய்துள்ளது என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது.
அமலாக்கத்துறையில் எனக்கு எதிராக சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு ஒன்று மட்டும் உள்ளது. அந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக கோர்ட்டில் நான் நேரில் ஆஜரானேன். தற்போது 2-வது வழக்கில் என்னிடம் விசாரணை நடத்துகிறார்கள். அமலாக்கத்துறையினர் ஏன் இதை செய்கிறார்கள் என்பது தெரியவில்லை. இதுபற்றி அறிய முயற்சி செய்வேன்.
சில பொறுப்புகள்
இந்த வழக்கு குறித்து எனது வக்கீல்களுடன் ஆலோசனை நடத்துவேன். ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையை தொடங்கி நடத்தி வருகிறார். சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் எனக்கும் சில பொறுப்புகள் உள்ளன. இந்த சூழ்நிலையில் எனக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். அமலாக்கத்துறையினர் எனக்கு தொல்லை கொடுத்து வருகிறார்கள்.19-ந் தேதி நேரில் ஆஜராவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவேன். எனக்கு கொடுக்கும் தொல்லையை கண்டு எங்கள் கட்சி தொண்டர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். நான் மட்டுமின்றி என்னுடன் உள்ளவர்களையும் கொடுமை படுத்துகிறார்கள். நான் சட்டவிரோதமாக என்ன செய்தேன் என்பது எனக்கு புரியவில்லை.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.