கொலை செய்துவிட்டு மனைவி பிணத்துடன் ஒருநாள் முழுவதும் அமர்ந்திருந்த என்ஜினீயர்- போலீசார் விசாரணையில் அம்பலம்


கொலை செய்துவிட்டு மனைவி பிணத்துடன் ஒருநாள் முழுவதும் அமர்ந்திருந்த என்ஜினீயர்- போலீசார் விசாரணையில் அம்பலம்
x

பெங்களூருவில் மனைவி, 2 மகள்கள், என்ஜினீயர் பிணமாக கிடந்த வழக்கில் மனைவியை கொன்ற 2 நாட்களுக்கு பிறகே மகள்களை என்ஜீனீயர் கொன்ற உருக்கமான தகவல் தெரியவந்துள்ளது.

பெங்களூரு:-

மனைவி, குழந்தைகள் கொலை

பெங்களூரு காடுகோடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சீகேஹள்ளியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் விஜய். இவரது மனைவி ஹேமாவதி. இந்த தம்பதிக்கு 2½ வயதில் மோக்ஷா மற்றும் 8 மாதங்களே ஆன சிருஷ்டி என்ற பெண் குழந்தைகள் இருந்தது. ஆந்திராவை சேர்ந்த விஜய் கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஆவார். பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் விஜய், அவரது மனைவி, 2 குழந்தைகள் வீட்டுக்குள் பிணமாக மீட்கப்பட்டார்கள். தனது மனைவி, 2 குழந்தைகளை கொலை செய்து விட்டு விஜய் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. ஆனால் என்ன காரணத்திற்காக மனைவி, குழந்தைகளை அவர் கொலை செய்தார்? எனபது தெரியவில்லை. இதுகுறித்து காடுகோடி போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

விஷம் கொடுத்துவிட்டு...

இந்த நிலையில், விஜய், ஹேமாவதி மற்றும் 2 குழந்தைகளின் உடல்கள் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் ஹேமாவதியை கழுத்தை நெரித்து விஜய் கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. அதற்கு முன்பாக ஹேமாவதிக்கு கட்டாயப்படுத்தி விஷத்தை கொடுத்துவிட்டு, அவரது கழுத்தை விஜய் நெரித்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுபோல், தனது 2 குழந்தைகளின் கழுத்தையும் துணியால் இறுக்கி விஜய் கொடூரமாக கொலை செய்திருந்தார். முதலில் மனைவியையும், அதன்பிறகு தான் குழந்தைகளையும் அவர் கொலை செய்திருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். கொலை செய்வதற்காக முன்பாகவே மனைவி மற்றும் தன்னுடைய செல்போனை விஜய் சுவிட்ச்-ஆப் செய்திருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குடும்பத்தினரிடம் விசாரணை

இதையடுத்து, கொலைக்கான காரணத்தை கண்டுபிடிக்க நேற்று விஜய் வீட்டில் காடுகோடி போலீசார் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் எந்த ஒரு கடிதமும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. அதே நேரத்தில் விஜய், ஹேமாவதியின் செல்போன்களை போலீசார் ஆய்வு செய்தபோதும், அதில் இருந்தும் இந்த சம்பவத்திற்கான காரணங்கள் கிடைக்கவில்லை என்று தெரியவந்துள்ளது.

அதைத்தொடர்ந்து, ஆந்திராவில் இருந்து வந்திருந்த விஜய், ஹேமாவதி குடும்பத்தினரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். அவர்கள் திருமணத்திற்கு பின்பு சண்டை போட்டுக் கொண்டர்களா?, அவர்களுக்குள் ஏதேனும் பிரச்சினை இருந்ததா? என விசாரித்தனர். அப்போது 2 குடும்பத்தினரும் விஜயும், ஹேமாவதியும் சந்தோஷமாக வாழ்ந்து வந்ததாகவும், அவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றும், அவர்கள் சண்டை போட்டு கொள்வதை ஒரு நாளும் பார்த்ததில்லை என்று கூறியுள்ளனர். அதேநேரத்தில் ஹேமாவதி, விஜய் ஆகியோரின் செல்போன்களை ஆய்வு செய்ததில் ஒரு சில தகவல்கள் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.

அதாவது ஹேமாவதியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அல்லது குடும்ப விவகாரத்தில் மனைவி, 2 குழந்தைகளை விஜய் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. அந்த கோணத்திலும் காடுகோடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பசியால் அழுத குழந்தைகள்

இதற்கிடையே பிரேத பரிசோதனை அறிக்கையில் ஹேமாவதி 31-ந்தேதியே உயிரிழந்ததும், அதன்பிறகு 2 நாட்கள் கழித்து தான் குழந்தைகள் உயிரிழந்ததும் தெரியவந்தது. இதனால் ஹேமாவதியை விஜய் கொலை செய்துவிட்டு அவரது உடலுடன் 24 மணி நேரம், அதாவது ஒரு நாள் முழுவதும் அப்படியே அமர்ந்திருந்ததாக போலீசார் கூறினர். அவர் அப்போது குழந்தைகளை கொலை செய்யவில்லை. ஆனால் ஒருநாள் முழுவதும் குழந்தைகள் தாயின் பேச்சு சத்தம் இல்லாமல் இருந்ததாலும், பசியாலும் அழத்தொடங்கினர். குழந்தைகளின் அழுகை நேரம் செல்ல செல்ல அதிகமாகி இருக்கிறது.

குழந்தைகளை தேற்ற முடியாத விஜய் முடிவில் அவர்களை கொலை செய்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் மனைவி மற்றும் குழந்தைகள் என 3 பேரையும் கொலை செய்துவிட்ட பிறகு வேறு வழியின்றி, தப்பிச்செல்லவும் மனமின்றி விஜய் தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.


Next Story