பா.ஜனதா பெயரில் போலி வேட்பாளர் பட்டியல் வெளியாகி பரபரப்பு


பா.ஜனதா பெயரில் போலி வேட்பாளர் பட்டியல் வெளியாகி பரபரப்பு
x
தினத்தந்தி 5 April 2023 12:15 AM IST (Updated: 5 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதா பெயரில் போலி வேட்பாளர் பட்டியல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு:

வேட்பாளர் பட்டியல்

கா்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்காக வேட்புமனு தாக்கல் வருகிற 13-ந் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் ஏற்கனவே முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் வெளியிட்டுவிட்டது. ஆனால் ஆளும் பா.ஜனதா இதுவரை வேட்பாளர் பட்டியலை அறிவிக்காமல் உள்ளது. சில தொகுதிகளில் வேட்பாளர்களை முடிவு செய்வதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று பா.ஜனதாவின் 100 தொகுதிகளுக்கு பா.ஜனதா வேட்பாளர் பட்டியல் வெளியானது. பா.ஜனதா பெயரில் வெளியான அந்த அறிக்கையில் 100 தொகுதிகளுக்கு வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. அதில் பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் அருண்சிங்கின் கையெழுத்து இடம் பெற்றிருந்தது. இந்த வேட்பாளர் பட்டியலை கர்நாடக பா.ஜனதா முற்றிலுமாக நிராகரித்துள்ளது.

போலீசில் புகார்

இது பா.ஜனதா பெயரில் போலி வேட்பாளர் பட்டியலை யாரோ சில விஷமிகள் வெளியிட்டு இருப்பதாகவும், இதை யாரும் நம்ப வேண்டாம் என்றும் அக்கட்சி கூறியுள்ளது. இந்த போலி வேட்பாளர் பட்டியலை தயாரித்து வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரி மல்லேசுவரம் போலீசில் பா.ஜனதாவினர் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கர்நாடக பா.ஜனதா பொது செயலாளர் அஸ்வத் நாராயண் நிருபர்களிடம் கூறுகையில், "காங்கிரஸ் தலைவர்கள் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் பா.ஜனதாவை நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாமல் இவ்வாறு எங்கள் கட்சியின் பெயரில் போலி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். தேர்தல் நெருங்கும்போது, இன்னும் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் தரம் தாழ்ந்து செயல்படுவார்கள். இதற்காக காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும். மல்லேசுவரம் போலீசில் புகார் அளித்துள்ளோம். இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கும் புகார் அனுப்பப்படும்." என்றார்.


Next Story