புத்திமதி கூறிய மாமனார் அடித்து கொலை-தொழிலாளி கைது
பெங்களூரு அருகே புத்திமதி கூறிய மாமனாரை அடித்து கொலை செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு:
பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புரா தாலுகா தொட்டபெலவங்கலா அருகே ஆருடி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பராயப்பா (வயது 65). இவரது மகள் ஷில்பா. இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஷில்பாவுக்கும், கோலாரை சேர்ந்த கூலி தொழிலாளியான பிரதாப் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் பிரதாப் இன்னொரு பெண்ணுடன் கள்ளக்காதலில் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் ஷில்பா தனது குழந்தையுடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆருடிக்கு வந்து விட்டார்.
இதையடுத்து நேற்று முன்தினம் ஆருடிக்கு வந்த பிரதாப், தன்னுடன் குடும்பம் நடத்த வரும்படி ஷில்பாவை அழைத்து உள்ளார். அப்போது சுப்பராயப்பா, பிரதாப்புக்கு புத்திமதி கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பிரதாப், சுப்பராயப்பாவை கிராமத்தின் ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்து சென்று சரமாரியாக அடித்து உள்ளார். இதில் நிலைகுலைந்து விழுந்த சுப்பராயப்பா இறந்தார். இந்த கொலை சம்பவம் குறித்து தொட்டபெலவங்கலா போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரதாப்பை கைது செய்து உள்ளனர்.