பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியரை தடியால் தாக்கிய மாணவிகள்
பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியரை மாணவிகள் தடியால் தாக்கிய சம்பவம் மண்டியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு:-
பாலியல் அத்துமீறல்கள்
இன்றைய காலக்கட்டத்தில் பிறந்த குழந்தைகள் முதல் மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமையில் சிக்கி தவிக்கிறார்கள். மாதா, பிதா, குரு, தெய்வம் என்று சொல்வதில், குருவுக்கு (ஆசிரியருக்கு) 3-வது இடத்தை வழங்கி உள்ளோம். ஆனால் பள்ளிக்கூடங்களில் பாடங்களை கற்றுக்கொடுக்க வேண்டிய சில ஆசிரியர்கள் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுவதால் ஒட்டுமொத்த ஆசிரிய சமூகமும் தலைகுனிவை சந்திப்பது கவலைக்குரியது தான்.
அந்த வகையில், கர்நாடக மாநிலம் மண்டியாவில் மாணவிகளை தனது குழந்தைகளாக பாவிக்க வேண்டிய தலைமை ஆசிரியர் ஒருவர், இரவில் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். தங்களுக்கு நித்தம் நித்தம் அரங்கேறிய அநீதிக்கு எதிராக மாணவிகள் சிங்கப்பெண்களாக பொங்கி எழுந்து, அந்த தலைமை ஆசிரியருக்கு பாடம் புகட்டிய சம்பவம் நடந்துள்ளது. பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் பற்றிய விவரம் பின்வருமாறு:-
மாணவிகள் தங்கும் விடுதி
மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகாவில் உள்ளது கட்டேரி கிராமம். இந்த கிராமத்தில் மகளிர் உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகிறார்கள். பள்ளி அருகிலேயே மாணவிகள் தங்கும் விடுதி உள்ளது. இங்கு 30-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கியிருந்து கல்வி பயின்று வருகிறார்கள்.
இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக சின்மயமூர்த்தி இருந்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களாக இரவில் மாணவிகள் தங்கும் விடுதிக்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது. இவ்வாறு வரும் அவர் சில மாணவிகளை தனது அறைக்கு வரவழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. மேலும் செல்போன்களில் ஆபாச வீடியோக்களை காட்டியும் தனது காம இச்சைக்கு இணங்க மாணவிகளை அவர் கட்டாயப்படுத்தி கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.
வெகுண்டெழுந்த மாணவிகள்
இதனால் மாணவிகள் கடும் கோபத்தில் இருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மாணவிகள் விடுதிக்கு வந்த சின்மயமூர்த்தி, தனது அறைக்கு வரவழைத்த ஒரு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி கதறி கூச்சல் போட்டப்படி அறையில் இருந்து வெளியே ஓடி வந்தார். சம்பவம் பற்றி சக மாணவிகளிடம் கூறி கதறி அழுதார். தலைமை ஆசிரியரின் அநாகரிகமற்ற செயல் நாளுக்கு நாள் அதிகரிப்பதை உணர்ந்த சக மாணவிகள் சிங்கப்பெண்களாக வெகுண்டெழுந்தனர். கைகளில் தடிகளுடன் தலைமை ஆசிரியர் அறைக்கு சென்றனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சின்மய மூர்த்தி தனது அறையை மூட முயன்றார்.
இருப்பினும் மாணவிகள் கதவை இடித்து தள்ளி சென்றனர். உள்ளே இருந்த அவரை தடியால் தாக்கினர். அவர் தான் தவறு செய்யவில்லை என கூறினார். அப்போது அங்கு வந்த பாதிக்கப்பட்ட மாணவி கதறி அழுதபடி தன்னிடம் அவர் தகாத செயலில் ஈடுபட்டார் என கூறினார். உடனே சுற்றி நின்ற மாணவிகள் தடியால் அவரை சரமாரியாக தாக்கினர்.
விசாரணையில் திடுக்கிடும் தகவல்
இதற்கிடையே சம்பவம் அப்பகுதி மக்களுக்கும் தகவல் தெரியவந்தது. உடனே அவர்களும் அங்கு விரைந்து வந்தனர். தலைமை ஆசிரியர் சின்மயமூர்த்திக்கு தர்ம-அடி கொடுத்தனர். மேலும் கே.ஆர்.எஸ். போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் அவரை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. அதாவது சின்மயமூர்த்தி, தனது பள்ளியில் பணியாற்றும் ஆசிரியையை தனது காமவலையில் வீழ்த்தியதும், அவருடன் உல்லாசமாக இருந்ததை செல்போனில் படம் பிடித்து வைத்திருப்பதும், அந்த வீடியோக்களை காட்டி மாணவிகளிடம் அவர் சில்மிஷத்தில் ஈடுபட்டதும், தனது ஆசைக்கு இணங்கவில்லை எனில் தேர்வில் மதிப்பெண்ணை குறைத்துவிடுவதாகவும், டி.சி. (மாற்றுச்சான்றிதழ்) கொடுத்து அனுப்பிவிடுவதாகவும் மிரட்டி வந்துள்ளார்.
பரபரப்பு
இதனால் மாணவிகள் பயந்து தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளியில் சொல்லாமல் இருந்து வந்துள்ளனர். ஆனால் நாளுக்கு நாள் அவரது கொடுமை அதிகரித்த நிலையில் நேற்று முன்தினம் இரவும் மாணவி ஒருவரிடம் அத்துமீறிய தலைமை ஆசிரியரை கையும், களவுமாக பிடித்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். இ்ந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
பணி இடைநீக்கம் செய்ய மந்திரி உத்தரவு
இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மாவட்ட பொறுப்பு மந்திரியும், மாநில கலால் துறை மந்திரியுமான கோபாலய்யா, மாணவிகளிடம் அத்துமீறிய தலைமை ஆசிரியரை பணி இடைநீக்கம் செய்ய மாவட்டகலெக்டருக்கும், மாவட்ட கல்வி அதிகாரிக்கும் உத்தரவிட்டுள்ளேன். அவர் மீது துறைரீதியான விசாரணை நடத்தப்படும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீண்டும் இத்தகைய சம்பவங்களில் ஈடுபடாமல் இருக்கும் வகையில், கைதான தலைமை ஆசிரியர் பொதுமக்கள் முன்னிலையில் ஊர்வலமாக அழைத்து செல்லப்படுவார் என்றார்.