சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்


சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்
x

சிவமொக்காவில் கிராம மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர். இதனால் கிராம மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

சிவமொக்கா:-

சிறுத்தை பிடிபட்டது

சிவமொக்கா தாலுகா ஆயனூரை அடுத்த மல்லாபுரா கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இதனால் வனப்பகுதியில் இருந்து சிறுத்தைகள், யானைகள் அடிக்கடி கிராமத்திற்குள் வந்து விளைப்பயிர்களை நாசம் செய்வதுடன், கிராம மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சிறுத்தை ஒன்று கிராமத்தில் உள்ள விளைநிலங்களுக்குள் சுற்றித்திரிந்தது. இதைப்பார்த்த கிராம மக்கள் பீதியடைந்தனர். மேலும் அந்த சிறுத்தையை பிடிக்கும்படி ஆயனூர் வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்ற ஆயனூர் வனத்துறை அதிகாரிகள் மல்லாபுரா கிராமத்திற்கு சென்று சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இதற்காக பிரத்யேக கூண்டு வைத்து காத்திருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை அந்த கூண்டில் சிறுத்தை ஒன்று சிக்கியது. இந்த சிறுத்தை இரை தேடி வந்தபோது சிக்கியதாக கூறப்படுகிறது. இதைப்பார்த்த கிராம மக்கள் உடனே வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

பீதியில் மக்கள்

சம்பவ இடத்திற்கு ெசன்ற வனத்துறை அதிகாரிகள், சிறுத்தையை கூண்டுடன் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். அந்த சிறுத்தையை தேவரகொப்பா உயிரியல் பூங்காவில் உள்ள தனி அறையில் வைத்து அடைத்து கண்காணித்து வருகின்றனர். கூண்டில் சிக்கிய சிறுத்தைக்கு ஒரு வயது இருக்கும் என்று கூறப்படுகிறது. அது பெண் சிறுத்தை ஆகும்.

இதேபோல மேலும் ஒரு சிறுத்தை அந்த கிராமப்பகுதியில் சுற்றி வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த சிறுத்தையையும் வனத்துறையினர் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக அதே கிராமத்தில் மேலும் ஒரு கூண்டு வைத்திருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் அந்த சிறுத்தையை பிடித்துவிடுவோம் என்று வனத்துறையினர் கூறியுள்ளனர். இருப்பினும் சிறுத்தை நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து இருப்பதால், மல்லாபுரா கிராம மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.


Next Story