சிறை அதிகாரிகள் 3 பேர் மீதான விசாரணை ரத்து
சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடி லஞ்சம் பெறப்பட்ட விவகாரத்தில் சிறை அதிகாரிகள் 3 பேர் மீதான விசாரணையை ரத்து செய்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு:-
3 அதிகாரிகள் மீது வழக்கு
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் சசிகலா அடைக்கப்பட்டு இருந்தார். அப்போது அவருக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாகவும், இதற்காக ரூ.2 கோடி லஞ்சம் பெறப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாகரத்தில் சிறைத்துறை டி.ஜி.பி. சத்திய நாராயண ராவ் குற்றமற்றவர் என ஊழல் தடுப்பு படை போலீசார் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர்.
இருப்பினும் ரூ.2 கோடி லஞ்ச வழக்கில் சிறைத்துறை சூப்பிரண்டராக இருந்த கிருஷ்ணகுமார், அவருக்கு அடுத்து சூப்பிரண்டாக இருந்த அனிதா, உதவி போலீஸ் சூப்பிரண்டு கஜராஜா மகனூர் ஆகிய 3 பேர் மீதும் ஊழல் தடுப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த கர்நாடக அரசு கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30-ந் தேதி அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்பேரில் அவர்கள் 3 பேர் மீதும் ஊழல் தடுப்பு படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது.
அரசின் உத்தரவு ரத்து
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கர்நாடக அரசின் உத்தரவை ரத்து செய்ய கோரியும் 3 பேரும் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் மீதான விசாரணை ஐகோர்ட்டில் நடந்தது. விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று நீதிபதி தீர்ப்பு கூறினார்.
அதாவது சிறை அதிகாரிகளான கிருஷ்ணகுமார், அனிதா, கஜராஜா மகனூர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய கர்நாடக அரசு வழங்கிய அனுமதியை ரத்து செய்து நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இதன் காரணமாக 3 அதிகாரிகளும் நிம்மதி அடைந்துள்ளனர்.