பெண்ணின் புகைப்படத்தை பேனரில் அச்சிட்ட விவகாரம்; யு.டி.காதர் பங்கேற்ற நிகழ்ச்சியில் புகுந்து பஜ்ரங்தள அமைப்பினர் போராட்டம்
மங்களூரு அருகே பெண்ணின் அனுமதி இல்லாமல் அவரது புகைப்படத்தை பேனரில் அச்சிட்டதால் ஆத்திரம் அடைந்த பஜ்ரங்தள அமைப்பினர் யு.டி.காதர் பங்கேற்ற நிகழ்ச்சியில் புகுந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மங்களூரு;
வளைகாப்பு நிகழ்ச்சி
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே உல்லால் - கொல்யா நாராயணகுரு பவனில் மாவட்ட பஞ்சாயத்து மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில் ஊட்டச்சத்து மாத திட்டம், வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இதற்காக அங்கு ஒரு பேனரும் வைக்கப்பட்டது.
அந்த பேனரில் ஒரு பெண் கையில் குழந்தையுடன் இருப்பது போன்ற படமும், முன்னாள் மந்திரியான யு.டி.காதர் எம்.எல்.ஏ.வின் படமும் அச்சிடப்பட்டு இருந்தது.
போராட்டம்
இந்த நிலையில் நேற்று காலையில் திட்டமிட்டபடி நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. நிகழ்ச்சியில் யு.டி.காதர் கலந்து கொண்டு கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியையும், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து மாத திட்டத்தையும் தொடங்கி வைத்து பேசிக் கொண்டிருந்தார். இந்த சந்தர்ப்பத்தில் அங்கு பஜ்ரங்தள அமைப்பினர் வந்தனர்.
அவர்கள் மண்டபத்திற்குள் அதிரடியாக புகுந்து யு.டி.காதருக்கு எதிராகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர். மேலும் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
பெண்ணின் அனுமதி இல்லாமல்...
இதையடுத்து அவர்களிடம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் பேனரில் அச்சிட்டு இருந்த பெண் பல ஆண்டுகளுக்கு முன்பு கர்ப்பமாக இருந்ததும், அது பழைய படம் என்பதும், அந்த படத்தை அவர்கள் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பேனரில் அச்சிட்டு இருந்ததும் தெரியவந்தது.
மேலும் அவர்கள் அந்த பெண்ணின் அனுமதி இல்லாமல் அவரது புகைப்படத்தை பேனரில் அச்சிட்டு இருந்ததும் தெரியவந்தது. இதனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும், அங்கு திரண்டிருந்த அரசு அதிகாரிகளும் செய்வதறியாது குழம்பி நின்றனர்.
பரபரப்பு
பின்னர் அவர்கள் பஜ்ரங்தள அமைப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உடனடியாக பேனரையும் அகற்றினர். அதையடுத்து சமாதானம் அடைந்த பஜ்ரங்தள அமைப்பினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.