பணி நிரந்தரம், சம்பள உயர்வு வழங்காவிட்டால் மைசூரு தசரா விழாவை புறக்கணிப்போம்; யானை பாகன்கள் சங்கம் எச்சரிக்கை


பணி நிரந்தரம், சம்பள உயர்வு வழங்காவிட்டால் மைசூரு தசரா விழாவை புறக்கணிப்போம்; யானை பாகன்கள் சங்கம் எச்சரிக்கை
x

பணி நிரந்தரம், சம்பள உயர்வு வழங்காவிட்டால் மைசூரு தசரா விழாவை புறக்கணிப்போம் என்று யானை பாகன்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குடகு;

மைசூரு தசரா விழா

உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா செப்டம்பர் மாதம் 26-ந்தேதி தொடங்க உள்ளது. இந்த தசரா விழாவை கோலாகலமாக கொண்டாட மாநில அரசு முடிவு செய்துள்ளது. மேலும் இந்த ஆண்டு தசரா விழாவுக்கு 15 யானைகளை மைசூருவுக்கு அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக வனத்துறையினர் துபாரே, மத்திகோடு, ராம்புரா உள்ளிட்ட பல்வேறு யானைகள் முகாம்களில் இருந்து 20 யானைகளை தேர்வு செய்துள்ளனர். இதில் 15 யானைகளை இறுதி செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆலோசனை கூட்டம்

இந்த நிலையில் யானை பயிற்சி முகாம்களில் உள்ள யானை பாகன்கள் சங்கத்தினர், தங்களுக்கு சம்பள உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும், கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மைசூரு தசரா விழாவை புறக்கணிப்போம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குடகு மாவட்டம் துபாரேயில் நேற்று யானை பாகன்கள் சங்கத்தினரின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் துபாரே, மத்திகோடு முகாம்களை சேர்ந்த பாகன்கள் கலந்துகொண்டனர். மேலும் சங்கத்தின் துணைத்தலைவர் டோபி கலந்து கொண்டு பேசியதாவது:-

தசராவை புறக்கணிப்போம்

யானைகள் முகாம்களில் பணியாற்றி வரும் யானை பாகன்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. மேலும் அவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார்கள். சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்றும் அதிகாரிகள், மந்திரிகளிடம் கோரிக்கை விடுத்தாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் முகாம்களில் பாகன்கள் பணியிடமும் காலியாக உள்ளது.

பாகன்களுக்கு அரசு எந்த வசதியும் செய்து கொடுக்கவில்லை. இதனால் அரசு எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மைசூரு தசரா விழாவை புறக்கணிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

12 யானைகள்

மைசூரு தசரா விழாவில் பங்கேற்பதற்காக துபாரே, மத்திகோடு முகாம்களில் இருந்து அம்பாரி சுமக்கும் அபிமன்யு, அர்ஜூனா, பலராமா, விஜயா, விக்ரமன், தனஞ்ஜெயா, ஹர்ஷா, பிரசாந்த், கோபி, காவேரி, ஈஸ்வரா உள்ளிட்ட 12 யானைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.


Next Story