புதிய வகை வைரஸ் பரவலை தடுக்க கர்நாடக அரசு இன்று முக்கிய ஆலோசனை


புதிய வகை வைரஸ் பரவலை தடுக்க கர்நாடக அரசு இன்று முக்கிய ஆலோசனை
x

கர்நாடகத்தில் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவலை தடுக்க கர்நாடக அரசு இன்று (திங்கட்கிழமை) முக்கிய ஆலோசனையில் ஈடுபட இருப்பதாகவும், மாநிலத்தில் கொரோனா பரவலும் சற்று அதிகரித்து இருப்பதாகவும் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்.

பெங்களூரு:

கொரோனா வைரஸ்

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இந்தியா உள்பட உலக நாடுகள் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனா பரவலுக்கு பிறகு அந்த வைரஸ் தொற்று பல்வேறு உருமாற்றம் அடைந்து தொடர்ந்து மக்களை தாக்கி வந்தது. உலக நாடுகள் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் உயிரிழந்தனர்.

இந்தியாவிலும் லட்சக்கணக்கான மக்கள் தங்களது உயிரை கொரோனாவுக்கு பறிகொடுத்தனர். தற்போது கொரோனா பரவல் குறைந்து கட்டுக்குள் இருக்கிறது என்றாலும், இன்னும் முழுமையாக மக்களைவிட்டு விலகிவிட வில்லை. இன்றளவும் அங்கொன்றும், இங்கொன்றுமாக கொரோனா வைரஸ் மக்களிடையே பரவிக் கொண்டுதான் இருக்கிறது.

புதிய வகை வைரஸ்

இந்த நிலையில் இந்தியாவில் 'எச்3.என்.2' என்ற புதிய வகை வைரஸ் பரவி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்த வைரஸ் தாக்குதல் பாதிப்புக்கு உள்ளானவர்கள் ஆஸ்பத்திரிகளில் வந்து குவிந்து வருவதாகவும் கூறப்படுகிறது. கர்நாடகத்திலும் இந்த வைரசின் பரவல் அதிகரித்து இருப்பதாக சொல்லப்படுகிறது.

பெங்களூருவில் இந்த புதிய வகை வைரசினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருவதாகவும், இந்த வைரசின் தாக்கம் குறித்து டாக்டர்கள் ஆய்வு செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் இந்த புதிய வகை வைரசின் பரவலை தடுப்பது குறித்து கர்நாடக அரசு இன்று(திங்கட்கிழமை) முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளது.

பரவுவதை தடுக்க...

இதுதொடர்பாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நாட்டில் 'எச்3.என்2.' வைரஸ் பரவி வருவது குறித்து உரிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி மாநிலங்களுக்கு மத்திய அரசின் சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. கர்நாடகத்தில் இந்த வைரஸ் இதுவரை பரவவில்லை. இந்த வைரசின் முக்கிய அறிகுறிகள் ஒன்று, நீண்ட நாட்களுக்கு இருமல் இருக்கும் என்று சொல்கிறார்கள். அத்துடன் காய்ச்சலும் இருக்கும். இந்த வைரஸ் பரவுவதை தடுக்கவும், பாதிப்பு ஏற்பட்டால் என்ன மாதிரியான சிகிச்சை அளிப்பது என்பது குறித்தும் ஆலோசிக்க நாளை (இன்று) சுகாதாரத்துறை அதிகாரிகளின் கூட்டத்தை கூட்டியுள்ளேன். இந்த விஷயத்தில் மத்திய அரசு அனுப்பியுள்ள வழிகாட்டுதலை தவறாமல் பின்பற்றுவோம்.

இன்று ஆலோசனை

கர்நாடகத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று (நேற்று முன்தினம்) கர்நாடகத்தில் 95 பேருக்கும், அதில் பெங்களூரு நகரில் மட்டும் 79 பேருக்கும் வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 100 நாட்களுக்கு பிறகு பெங்களூரு உள்பட அனைத்து மாவட்டங்களில் கொரானா பரவல் சற்று அதிகரித்துள்ளது. இது அரசுக்கு சற்று பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது 291 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனா பரவலை தடுப்பது குறித்து உரிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். அதனால் நாளை (இன்று) நடைபெறும் சுகாதாரத்துறையின் முக்கிய ஆலோசனை கூட்டத்தில் கொரோனா பரவல் குறித்தும் ஆலோசனை நடத்தப்படும்.

இவ்வாறு சுதாகர் கூறினார்.

முன்னதாக அவர் உலக மகளிர் தின விழாவையொட்டி சைக்கிள் பேரணியை பெங்களூருவில் தொடங்கி வைத்தார்.


Next Story