மன்னர் குடும்பத்தினர் வெள்ளித்தேரை இழுத்து தொடங்கி வைத்தனர்
மைசூரு சாமுண்டீஸ்வரி கோவிலில் வர்தந்தி உற்சவ விழா நடைபெற்றது. இதில் மன்னர் குடும்பத்தினர் வெள்ளித்தேரை இழுத்து தொடங்கி வைத்தனர். .
மைசூரு:-
சாமுண்டீஸ்வரி கோவில்
மைசூரு அருகே சாமுண்டி மலையில் பிரசித்த பெற்ற சாமுண்டீஸ்வரி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு மைசூரு மட்டுமின்றி வெளிமாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கிறார்கள். மேலும் ஆண்டுதோறும் தசரா மற்றும் கன்னட ஆடி மாத வெள்ளிக்கிழமையையொட்டி சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது. அதேப்போல் இந்த ஆண்டும் கன்னட ஆடி வெள்ளிக்கிழமைகளில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன.
இதனால், வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் கோவிலில் அலைமோதி வருகிறது. மேலும் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவசம் என்பதால் சாமுண்டீஸ்வரிக்கு கோவிலுக்கு விடுமுறை நாட்களில் பெண்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்தநிலையில் நேற்று சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு வர்தந்தி உற்சவ விழா நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், ஆராதனை ஆகியவை அதிகாலை 4.30 மணிக்கு நடைபெற்றது. காலை 8 மணிக்கு சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு பட்டு சேலை, தங்கம், வைரம் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டன.
வெள்ளித்தேர் ஊர்வலம்
மைசூரு மன்னர் குடும்பத்ைத சேர்ந்த மகாராணி பிரமோதா தேவி உடையார், மன்னர் யதுவீர் உடையார், அவரது மனைவி திரிஷிகா குமாரி ஆகியோருக்கு கோவில் சார்பில் முதல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் அம்மனை வெள்ளித் தேரில் வைத்து கோவிலை சுற்றி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. மகாராணி பிரமோதா தேவி உடையார், மன்னர் யதுவீர் உடையார், திரிஷிகா குமாரி, கர்நாடக மாநில இந்து சமய நலத்துறை மந்திரி ராமலிங்க ரெட்டி, மாவட்ட கலெக்டர் ராஜேந்திர பிரசாத் ஆகியோர் வெள்ளித் தேரை இழுத்து தொடங்கி வைத்தனர்.
அப்போது ஏராளமான பக்தர்கள் சாமுண்டீஸ்வரி அம்மனை தரிசனம் செய்தனர். மேலும் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் சாமுண்டீஸ்வரி அம்மனை நேரடியாக தரிசனம் செய்தனர். சாமுண்டி மலைக்கு தனியார் வாகனங்களில் பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை. இதேப்போல் வர்தந்தி உற்சவத்திற்கும் ஏராளமான பக்தர்கள் குவிவார்கள்.
போலீஸ் பாதுகாப்பு
இதனால் நேற்றும் பக்தர்கள் தனியார் வாகனங்களில் சாமுண்டி மலைக்கு செல்ல அனுமதி அளிக்கவில்லை. அவர்களுக்கு மலைப்பாதைக்கு கீழே லலிதா மகால் அரண்மனை அருகே வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்்தது.
அவர்கள் ஹெலிபேட் மைதானத்தில் இருந்து அரசு பஸ்கள் மூலம் சாமுண்டி மலைக்கு சென்றனர். இதற்காக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. அந்த பஸ்களில் பக்தர்கள் இலவசமாக பயணம் செய்தனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. வர்தந்தி உற்சவத்தைெயாட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதனால் சாமுண்டீஸ்வரி கோவிலை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.