தீர்த்தஹள்ளி அருகே தோட்டத்தில் தொழிலாளி மர்மசாவு
தீர்த்தஹள்ளி அருகே தோட்டத்தில் மர்ம முறையில் பிணமாக கிடந்த தொழிலாளி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவமொக்கா;
சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி தாலுகா தலவடக்கத குட்ரா கிராமத்தில் உள்ள தோட்டத்தில் தொழிலாளி ஒருவர் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்த கிராம மக்கள் சந்தேகம் அடைந்து உடனே தீர்த்தஹள்ளி போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், இறந்தவர் தலவடக்கத குட்ரா கிராமத்தை சேர்ந்த ரமேஷ் (வயது 55) என்று தெரியவந்தது. மதுபோதையில் சுய நினைவை இழந்து தோட்டத்தில் உள்ள வயல் வரப்பில் விழுந்ததாக தெரிகிறது. ஆனால் எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. இதற்கு முன்பு அவர் சாராயம் விற்பனையில் ஈடுபட்டிருந்தார்.
மேலும் பெங்களூருவில் உள்ள மதுபானக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்ததாகவும் தெரியவந்தது. இதனால் அளவுக்கு அதிகமாக குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். இதில் மதுபோதை தலைக்கேறி உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்திருக்க கூடும் என்று போலீசார் சந்தேகித்துள்ளனர். இதுகுறித்து தீர்த்தஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.