தவறு செய்தவர்கள் யாரையும் சட்டம் விட்டு வைக்காது
கிழக்கு மண்டல போலீஸ் கட்டிடத்தை திறந்து வைத்த பின்னர், மந்திரி அரக ஞானேந்திரா பேசுகையில் தவறு செய்தவர்கள் யாரையும் சட்டம் விட்டு வைக்காது என்று கூறினார்.
சிவமொக்கா:-
புதிய கட்டிடம்
சிவமொக்கா டவுன் கோட்டை பகுதியில் ரூ.1¾ கோடி செலவில் கிழக்கு மண்டல போலீஸ் துறைக்கு புதிதாக காவல் நிலைய கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தை போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா திறந்து வைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். இதையடுத்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
சிவமொக்கா மாவட்டத்தில் கடந்த ஆண்டு (2022) பல்வேறு கொலை சம்பவங்கள் அங்கேறின. இவை முன்விரோதம், இந்து அமைப்பினர்களுக்கு எதிரான கொலைகள் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் சிவமொக்காவில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பயன்பாடு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதிகரித்து இருந்தது.
ஆனால் போலீசாரின் தீவிர வேட்டை மற்றும் கைது நடவடிக்கைகளால் குற்றச்சம்பவங்கள் குறைந்து வருகிறது. சிவமொக்கா நகர் வளர்ச்சி அடைந்து விரிவடைந்து வருகிறது. எனவே சிவமொக்காவில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டிய நிலை உள்ளது. தற்போது புதிதாக கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடம் மேலும் நகரின் பாதுகாப்பை உறுதி செய்யும்.
கைது நடவடிக்கை
தொழில் அதிபர் பிரதீப் தற்கொலை விவகாரத்தில் அவர் எழுதிய கடிதத்தில் பா.ஜனதாவை சேர்ந்த எம்.எல்.ஏ. அரவிந்த் லிம்பாவளி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதற்காக அவரை கைது செய்துவிட முடியாது.
கடிதத்தில் பெயர் இருந்தால் அவர் குற்றவாளி ஆகிவிட முடியாது. இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வருவதால், அதன் உண்மை தன்மையை கண்டறிந்த பின்னரே கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குற்றம் உறுதி செய்யப்பட்டால் மட்டுமே அவரை போலீசார் கைது செய்வார்கள். சட்டம் தனது கடமையை செய்யும், தவறு செய்தவர்கள் யாரையும் விட்டு வைக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.