போலீஸ்காரரை தாக்கிவிட்டு தப்பியோடியவர் சுட்டு பிடிப்பு
கொலை வழக்கில் கைதானவர், போலீஸ்காரரை தாக்கிவிட்டு தப்பியோடியபோது துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டார்.
சிவமொக்கா
தனியார் நிறுவன ஊழியர் கொலை
சிவமொக்கா டவுன் வெங்டேஸ்வரா நகர் பகுதியை சேர்ந்தவர் விஜய். தனியார் நிறுவன ஊழியர். இவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்மநபர்கள் கொலை செய்தனர். இதுகுறித்து ஜெயநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் விஜயை கொலை செய்ததாக அதேப்பகுதியை சோ்ந்த ஜெபி (23), தர்ஷன் (21), கார்த்திக் (21) ஆகிய 3 பேரை போலீசார் கைது ெசய்தனர். விசாரணையில், முன்விரோதத்தில் அவர்கள் விஜயை கொலை செய்தது தெரியவந்தது.அவர்கள், கொலைக்கு பயன்படுத்திய கத்தியை, தனியார் நட்சத்திர ஓட்டல் அருகே மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது.
போலீஸ்காரர் மீது தாக்குதல்
இந்த நிலையில் ஜெயநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹர்ஷா, மற்றும் போலீசார் கைதான 3 பேரையும் கொலை நடந்த இடத்துக்கும், கத்தியை மறைத்து வைத்த இடத்துக்கும் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கு வைத்து, கைதான ஜெபி, போலீசாரின் பிடியில் இருந்து தப்பியோட முயன்றார்.
இதனை பார்த்த போலீஸ்காரர் ரோஷன் என்பவர், ஜெபியை மடக்கி பிடிக்க முயன்றார்.அந்த சமயத்தில் ஜெபி, அங்கிருந்த ஆயுதத்தை எடுத்து ரோஷனை தாக்கினார். பின்னர் அங்கிருந்து தப்பியோடினார்.
சுட்டுபிடிப்பு
மேலும் அங்கிருந்த ேபாலீசார், அவரை பிடிக்க முயன்றர். அப்போது மற்ற போலீஸ்காரர்களையும் அவர் தாக்க முயன்றார். இதனை பார்த்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹர்ஷா, தான் வைத்திருந்த துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு, சரண் அடைந்துவிடும்படி ஜெபிக்கு எச்சரிக்கை விடுத்தார். ஆனாலும் அதனையும் பொருட்படுத்தாமல் ஜெபி, அங்கிருந்து தப்பியோடினார்.
அப்போது, இன்ஸ்பெக்டர் ஹர்ஷா, தான் வைத்திருந்த துப்பாக்கியால் ஜெபியை நோக்கி 2 ரவுண்டு சுட்டார். இதில், ஒரு குண்டு ஜெபியின் இடது காலில் பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். இதையடுத்து போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்தனர்.
போலீஸ் விசாரணை
அதன்பின்னர், ஜெபி தாக்கியதில் காயம் அடைந்த போலீஸ்காரர் ரோஷன், ஜெபி ஆகியோரை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஜெயநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.