பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் சிக்கினார்
ஜே.பி.நகர் பகுதியில் காலை நேரங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போலீசில் சிக்கினார்.
ஜே.பி.நகர், மார்ச்.13-
பெங்களூரு ஜே.பி.நகர் ஆர்.பி.ஐ. லே-அவுட் பகுதியில் 31 வயது பெண் ஒருவர் வசித்து வருகிறார். அவர் தனது மகளை அருகில் உள்ள பள்ளிக்கு ஸ்கூட்டரில் அழைத்து சென்றார். அப்போது செல்லும் வழியில் அவரை மர்மநபர் ஒருவர் வழிமறித்தார். மேலும், அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து அந்த பெண் கத்தி கூச்சலிட்டார். உடனே அந்த மர்மநபர் அங்கிருந்து தப்பிஓடினார். அப்போது அந்த பகுதியில் யாரும் இல்லாததால் மர்மநபர் தப்பி சென்றார். இதேபோல் அதே பகுதியை சேர்ந்த 46 வயது பெண் ஒருவர் காலை நேரத்தில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அங்கு வந்த மர்மநபர், அந்த பெண்ணை வழிமறித்து, அவர் முன்பு ஆபாச செய்கையை செய்துள்ளார். இதையடுத்து அந்த பெண் கூச்சலிட்டதையடுத்து அவர் தப்பி ஓடினார். இதுகுறித்து 2 பெண்களும் தனித்தனியே ஜே.பி.நகர் போலீசில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாக வாலிபர் ஒருவரை பிடித்து போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவரது பெயர் உலுகுப்பா என்பதும், அவர் தான் பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொண்டவர் என்பதும் தெரிந்தது. மேலும் அவர் இதேபோல் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஏராளமான பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொண்டது தெரிந்தது. அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.