தலித் சிறுவன் குடும்பத்திற்கு ரூ.60 ஆயிரம் அபராதம் விவகாரம்: கர்நாடக மாநில குழந்தைகள் நலத்துறை தாமாக முன்வந்து வழக்குப்பதிவு
கோலார் அருகே தலித் சிறுவன் குடும்பத்திற்கு ரூ.60 ஆயிரம் அபராதம் விவகாரத்தில் கர்நாடக மாநில குழந்தைகள் நலத்துறை தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.
கோலார் தங்கவயல்:
தலித் சிறுவனுக்கு அபராதம்
கோலார் மாவட்டம் மாலூர் தாலுகா மாஸ்தி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட கொல்லேரஹள்ளி கிராமத்தில் அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு தேர் திருவிழா நடைபெற்றது. அப்போது அதே கிராமத்தை சேர்ந்த சேத்தன் என்று சிறுவன் அம்மன் சிலையை தொட்டு வணங்கி உள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமத்தை சேர்ந்த மற்றொரு தரப்பினர் சிறுவன் குடும்பத்திற்கு ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
அபராத தொகையை செலுத்தாவிட்டால் ஊரை விட்டு காலி செய்யவேண்டும் என்றும் அறிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர் மாஸ்தி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் 8 பேரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர் வெங்கடராஜா, போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ்
உள்ளிட்டோர் அம்மன் கோவிலுக்கு தலித் சிறுவன் மற்றும் அவரது பெற்றோரை கோவிலுக்குள் அழைத்துச் சென்று சாமி தரிசனம் செய்ய வைத்து அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
தாமாக வழக்குப்பதிவு
அதைதொடர்ந்து சிறுவனின் குடும்பத்திற்கு பல்வேறு சலுகைகளை கலெக்டர் அறிவித்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் கர்நாடக மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை தாமாக முன்வந்து தலித் சிறுவன் சாமி சிலையை தொட்டதற்காக ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்த சம்பவத்தை வழக்குபதிவு செய்துள்ளது.
மேலும் விசாரணை நடத்த தொடங்கியுள்ளனர்.