ஆற்றில் தண்ணீரில் மேல் நடந்து சென்ற அதிசய பெண்: தரிசனம் வேண்டி வெள்ளம் போல் திரண்ட மக்கள்...!
மத்திய பிரதேசத்தில் ஆற்று தண்ணீர் மேல் நடக்கும் பெண் தெய்வத்தை பார்க்க மக்கள் வெள்ளம் போல் திரண்ட சம்பவம் இணையத்தில் வைரலாகியது.
போபால்,
மத்திய பிரதேசத்தில் நர்மதா ஆற்றை தனியாக கடந்த பெண்ணை தெய்வமாக கருதி ஆயிரக்கணக்கானோர் வழிபட்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் மூன்று நாட்களுக்கு முன்பு நர்மதா ஆற்றில் வயதான பெண் நடந்து செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. நர்மதா ஆற்றில் தண்ணீரில் மேல் மூதாட்டி நடந்து சென்ற நிலையில் இதை அதிசயம் என்று நம்பி அந்த மூதாட்டியை பார்க்க நூற்றுக்கணக்கானோர் திரண்டனர்.
அந்த பெண் நார்மதா தேவி என்ற செய்தியும் தீயாக பரவியது. நர்மதா தேவியின் வடிவத்தில் அந்த மூதாட்டி தண்ணீரில் நடப்பதாக வீடியோவில் விளம்பரம் செய்யப்பட்டது.
இந்த வீடியோ சுற்றியுள்ள கிராமங்களில் பரவியதால் நர்மதா தேவி என நினைத்து அந்த மூதாட்டியை தரிசனம் செய்ய மக்கள் கூட்டம் அலைமோதியது.
நர்மதா தேவியின் தரிசனம் கிடைக்காதா என்ற ஏக்கத்துடன் மூதாட்டியின் வீட்டின் முன்பு ஆயிரக்கணக்கானோர் காத்திருந்தனர். மத்திய பிரதேசத்தில் ஆற்று தண்ணீர் மேல் நடக்கும் பெண் தெய்வத்தை பார்க்க மக்கள் வெள்ளம் போல் திரண்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியது.
இந்தநிலையில் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பெண் ஜோதி ரகுவன்ஷி என அடையாளம் காணப்பட்டுள்ளார். தண்ணீரில் நடப்பதையோ அல்லது எந்த ஒரு தெய்வத்தின் அவதாரமாக இருப்பதையோ அவர் மறுத்தார். கடந்த 10 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய அவர், நர்மதாபுரத்தில் வசிப்பதாக தெரிவித்தார்.
ஜோதி ரகுவன்ஷி, நர்மதா நதியைச் சுற்றி நடப்பதன் மூலம் அவர் ஒரு அதிசய பெண் என நம்பி அவரை மக்கள் சூழ்ந்து கொண்டு தரிசனத்திற்காக காத்துக்கொண்டிருக்கிறனர்.. போலீசார் அவரது குடும்பத்தினரை தொடர்பு கொண்டு, அவரை வீட்டிற்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்து வருவதாக தெரிவித்துள்ளனர்.