மத்திய அரசின் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு


மத்திய அரசின் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு
x
தினத்தந்தி 2 Sep 2023 12:00 AM GMT (Updated: 2 Sep 2023 12:00 AM GMT)

மத்திய அரசின் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

புதுடெல்லி,

மத்திய அரசின் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இந்த 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்துக்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசின் இந்த 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. இது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என்றும் அவை குற்றம் சாட்டியுள்ளன.

இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரியுமான கமல்நாத் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்துக்காக அரசியல் சாசனத்தை திருத்த வேண்டும். மேலும் இதற்காக நாடாளுமன்ற இரு அவைகளிலும் மட்டும் மசோதா நிறைவேற்றினால் போதாது. அது மாநில சட்டமன்றங்களாலும் அங்கீகரிக்கப்பட வேண்டும்' என கூறினார்.

அரியானா, மராட்டியம் போன்ற பா.ஜனதா ஆளும் மாநிலங்கள் இதை ஆதரிக்கலாம், ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்காளம் ஆதரிக்குமா? என கேள்வி எழுப்பிய கமல்நாத், இவ்வாறு அனைத்து மாநிலங்களும் ஒப்புதல் அளிப்பது சாத்தியமில்லை என்றும் தெரிவித்தார்.

இந்தியா கூட்டணியால் அச்சத்தில் இருக்கும் பா.ஜனதா, இதில் இருந்து மக்களை திசை திருப்பவே இந்த திட்டத்தை கையில் எடுத்திருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சாடியுள்ளது.

'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்துக்காக குழு அமைத்திருப்பது ஜனநாயகத்துக்கு எதிரானது அந்த கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் சுஜன் சக்கரவர்த்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் டி.ராஜா கூறும்போது, 'இந்தியாவை ஜனநாயகத்தின் தாய் என பிரதமர் மோடி எப்போதும் கூறி வருகிறார். அப்படியிருக்க பிற அரசியல் கட்சிகளை கலந்து ஆலோசிக்காமல் இது தொடர்பாக எப்படி முடிவு எடுக்க முடியும்?' என கேள்வி எழுப்பி உள்ளார்.

ஆம் ஆத்மியை சேர்ந்த பிரியங்கா காக்கர், 'எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையால் பா.ஜனதாவினர் பதற்றத்தில் உள்ளனர். முதலில் அவர்கள் கியாஸ் சிலிண்டர் விலையை குறைத்தார்கள். தற்போது அரசியல் சாசனத்தை திருத்துவது குறித்து ஆலோசிக்கிறார்கள். இதன்மூலம் வருகிற தேர்தல்களில் தாங்கள் வெற்றி பெறமாட்டோம் என்பதை அவர்கள் உணர்ந்து விட்டார்கள்' என தெரிவித்தார்.

சிவசேனா (உத்தவ்) கட்சித்தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத் கூறும்போது, 'இந்த நாடு ஒன்றாகத்தான் இருக்கிறது. இதில் யாருக்கும் எந்த கேள்வியும் இல்லை. நாங்கள் நேர்மையான தேர்தலைத்தான் கேட்கிறோம், 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' அல்ல' என கூறினார்.

அதேநேரம் மத்திய அரசின் இந்த திட்டத்தை பா.ஜனதாவினர் வரவேற்று உள்ளனர்.

அந்தவகையில் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறுகையில், 'ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்துக்காக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் கமிட்டி அமைத்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்காக பிரதமர் மோடிக்கு உத்தரபிரதேச மக்கள் சார்பில் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்' என தெரிவித்தார்.

நாடாளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால் அரசு மற்றும் மக்களின் நேரமும், பணமும் மிச்சமாவது மட்டுமின்றி, தேர்தல் நடத்தை விதிகளால் வளர்ச்சி திட்டங்கள் அடிக்கடி தடைபடுவதும் நிறுத்தப்படும் என குஜராத் மாநில பா.ஜனதா தலைவர் பாட்டீல் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டால், அதற்காக கூடுதல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் விவிபாட் எந்திரங்கள் தேவை.

இதற்காக பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் தேவைப்படும்.

மேலும் கூடுதல் தேர்தல் பணியாளர்கள், பாதுகாப்பு படையினரும் இத்தகைய மாபெரும் தேர்தல் திருவிழாவுக்காக பணியமர்த்தப்பட வேண்டும்.

அதேநேரம் நீண்ட கால அடிப்படையில் பார்க்கும்போது, இந்த ஒரே நேர தேர்தலால் மிகப்பெரிய அளவில் மக்களின் வரிப்பணம் மிச்சமாகும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு அவர்களின் தேர்தல் பிரசார செலவினங்களில் கணிசமான சேமிப்பைக் கொண்டுவரும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இதைத்தவிர அடிக்கடி தேர்தல் நடத்துவதால் நிர்வாகம் மற்றும் சட்டம்-ஒழுங்கு நெருக்கடிகள் தவிர்க்கப்படும் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இடைத்தேர்தல்கள் உள்பட மக்களவை மற்றும் சட்டப் பேரவைத் தேர்தல்கள் அடிக்கடி நடைபெறுவதால் தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக வளர்ச்சி திட்டங்களில் தேக்கம் ஏற்படுவதையும் அவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.


Next Story