வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணி- செப்டம்பர் 30-ந் தேதி முதல் தொடங்குகிறது


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணி- செப்டம்பர் 30-ந் தேதி முதல் தொடங்குகிறது
x

கர்நாடக மேல்-சபையில் பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர்கள் தொகுதிகளுக்கான தேர்தலுக்காக அடுத்த மாதம்(செப்டம்பர்) 30-ந் தேதி முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணிகள் தொடங்குவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பெங்களூரு-

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு

கர்நாடக மேல்-சபையில் ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி தொகுதிகளில் உறுப்பினர்களாக இருக்கும் 6 பேரின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு(2024) ஜூன் மாதத்துடன் நிறைவு பெறுகிறது. மேலும் பா.ஜனதா உறுப்பினராக இருந்த புட்டண்ணா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரசில் சேர்ந்துள்ளார். இதனால் 7 தொகுதிகளுக்கும் அடுத்த ஆண்டு(2024) ஜூன் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலுக்கான வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணிகளையும், இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகளையும் தொடங்கும்படி இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, அடுத்த மாதம்(செப்டம்பர்) 30-ந் தேதியில் இருந்து ஆசிரியர்கள், பட்டதாரிகள் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணிகள் தொடங்கி நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இறுதி வாக்காளர் பட்டியல்

செப்டம்பர் 30-ந் தேதி முதல் நவம்பர் 6-ந் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 23-ந் தேதி உத்தேச பூர்வ வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. நவம்பர் 23-ந் தேதியில் இருந்து டிசம்பர் 9-ந் தேதி வரை ஆட்சேபனை தெரிவிக்க காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்பிறகு, வாக்காளர் பட்டியல் சரி பார்க்கும் பணிகள் நடத்தப்பட்டு, டிசம்பர் 30-ந் தேதி 7 மேல்-சபை உறுப்பினர்களின் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


Next Story