40 வினாடியில் 26 முறை கத்தியால் குத்தி ரவுடி கொடூர கொலை; நெஞ்சை பதற வைக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பு
40 வினாடியில் 26 முறை கத்தியால் குத்தி பிரபல ரவுடி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பான நெஞ்சை பதற வைக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரு:
பிரபல ரவுடி
பெங்களூரு மகாதேவபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் ரேணுகுமார். இவர் பிரபல ரவுடி ஆவார். இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரேணுகுமார், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்த ரேணுகுமார், தனது கூட்டாளிகளை மிரட்டியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவரது கூட்டாளிகள் ரேணுகுமாரை கொலை செய்ய முடிவு செய்தனர். இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி ரேணுகுமாரை, அவரது கூட்டாளிகள் 3 பேர் நேரில் சந்தித்து பேசினர்.
கொலை
அப்போது அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அந்த சமயத்தில் 3 பேரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரேணுகுமாரை சரமாரியாக குத்தினர். இதில் பலத்த கத்திக்குத்தால் காயம் அடைந்த ரேணுகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் மகாதேவபுரா போலீசார் விரைந்து வந்து, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் ரேணுகுமாரை கொலை செய்ததாக அவரது கூட்டாளிகளான பிரசாந்த், ஸ்ரீகாந்த், வசந்த் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
40 வினாடியில் 26 முறை
இந்த நிலையில் தற்போது ரேணுகுமாரை அவரது கூட்டாளிகள் கொலை செய்யும் நெஞ்சை பதற வைக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, ரேணுகுமாரை அவரது கூட்டாளிகள் 40 வினாடிகளில் 26 முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்திருந்தனர்.
இது அந்தப்பகுதியில் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.