வியாபாரியை தாக்கிய ரவுடி கைது
பெங்களூருவில் வியாபாரியை தாக்கிய பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
சித்தாபுரா:-
பெங்களூரு சித்தாபுரா அருகே கனகன பாளையாவை சேர்ந்தவர் ராஜேஸ். வியாபாரி. இவர், தள்ளுவண்டியில் துரித உணவுகள் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். கடந்த 17-ந் தேதி ராஜேஸ் வீட்டுக்குள் மர்மநபர்கள் சிலர் புகுந்தனர். பின்னர் அவர்கள் திடீரென்று ராஜேசை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கினார்கள். இதில், அவருக்கு பலத்தகாயம் ஏற்பட்டது. இதற்காக அவர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் சித்தாபுரா போலீஸ் நிலையத்தில் ராஜேஸ் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
அப்போது ராஜேசை, ரவுடியான நவீன் மற்றும் அவரது கூட்டாளிகள் தாக்கியது தெரியவந்தது. பணப்பிரச்சினை மற்றும் முன்விரோதத்தில் ராஜேசை தாக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த ரவுடி நவீன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.