தொழில்அதிபர் வீட்டில் திருடிய உறவினர் கைது


தொழில்அதிபர் வீட்டில் திருடிய உறவினர் கைது
x
தினத்தந்தி 4 Oct 2023 12:15 AM IST (Updated: 4 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆன்லைனில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த தொழில்அதிபர் வீட்டில் திருடிய உறவினர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.1¾ கோடி நகை-பணம் மீட்கப்பட்டுள்ளது.

திலக்நகர்:-

தொழில்அதிபர் வீட்டில் திருட்டு

பெங்களூரு திலக்நகர் எஸ்.ஆர்.கே. கார்டன் பகுதியில் தொழில் அதிபர் ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவர் சமீபத்தில் தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் ராமநகரில் நடந்த உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். இதனை அறிந்த மர்மநபர்கள், தொழில் அதிபரின் வீட்டுக்குள் புகுந்து தங்க நகைகள், ரொக்கப்பணத்தை திருடி சென்றுவிட்டனர். இந்த நிலையில் வீட்டுக்கு திரும்பி வந்த தொழில்அதிபர், வீட்டில் இருந்த நகை-பணம் திருட்டு போயிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர் தனது மகளின் திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த 2 கிலோ தங்க நகைகள், ரூ.8 லட்சம் ரொக்கத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து திலக்நகர் போலீசில் தொழில் அதிபர் புகார் அளித்தார்.

உறவினர் கைது

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது அவரது வீட்டின் அருகில் இருந்த கண்காணிப்பு கேமராவை சோதனை செய்தபோது தொழில்அதிபரின் உறவினர் ஒருவர் தான் வீட்டிற்குள் புகுந்து திருடியது தெரியவந்தது. இதையடுத்து தொழில்அதிபரின் உறவினரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் தான் திருடியது தெரியவந்தது. மேலும் தொழில்அதிபர் வீட்டில் இல்லாததை அறிந்த அந்த நபர், கள்ளச்சாவியை பயன்படுத்தி வீட்டுக்குள் புகுந்து திருடியது தெரியவந்தது. மேலும் அவர் ஆன்லைன் செயலி மூலம் கடன் வாங்கி இருந்தார். அந்த கடனை திரும்ப செலுத்துவதற்காக தொழில்அதிபர் வீட்டில் திருடியதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரிடம் இருந்து ரூ.1 கோடி 10 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், ரூ.74 ஆயிரம் ரொக்கம் ஆகியவை மீட்கப்பட்டது. பறிமுதல் செய்த நகை, பணம் பெங்களூரு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது. அதனை போலீஸ் கமிஷனர் தயானந்த் பார்வையிட்டார்.


Next Story