புதிய வகை கொரோனா பாதிப்பின் வீரியம் குறைவு தான்; சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பேட்டி


புதிய வகை கொரோனா பாதிப்பின் வீரியம் குறைவு தான்; சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பேட்டி
x
தினத்தந்தி 28 Dec 2022 12:15 AM IST (Updated: 28 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

புதிய வகை கொரோனா பாதிப்பின் வீரியம் குறைவு தான் என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறியுள்ளார்.

பெங்களூரு:

மருத்துவ படுக்கைகள்

சீனா உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை கொரோனா பரவி வருகிறது. இதனால் இந்தியாவில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதையொட்டி மத்திய அரசின் சுகாதாரத்துறை உத்தரவின்பேரில் நேற்று அனைத்து மாநிலங்களிலும் அரசு ஆஸ்பத்திரிகளில் மருத்துவ வசதிகள் குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. கர்நாடகத்திலும் மாவட்ட-தாலுகா ஆஸ்பத்திரிகள், பெங்களூருவில் விக்டோரியா, கே.சி.ஜெனரல் மற்றும் சி.வி.ராமன் ஆஸ்பத்திரிகளில் இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

மருத்துவ படுக்கைகள், ஆக்சிஜன் வசதிகள், செயற்கை சுவாச கருவிகள் போன்றவற்றை தயாராக வைப்பது போன்ற விஷயங்கள் மேற்கொள்ளப்பட்டன. சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் இந்த ஒத்திகை நிகழ்ச்சியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

அதிக பாதிப்புகள்

பி.எப்.7 வைரஸ் ஒமைக்ரானின் புதிய உருமாற்றம். மற்ற வகை கொரோனாவுக்கும், பி.எப்.7-க்கும் இடையே உள்ள வித்தியாசம் என்னவென்றால் இது அதிக வேகமாக பரவக்கூடிய தன்மையை சேர்ந்தது. ஆனால் உடல் ரீதியாக அதிக பாதிப்புகளை ஏற்படுத்தாது. அதே நேரத்தில் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்களுக்கு இது சற்று அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று மருத்துவ அறிக்கைகள் வந்துள்ளன. இதனால் அவர்கள் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அதனால் தான் நாங்கள் நேற்று (நேற்று முன்தினம்) புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளோம். வயது முதியவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்களுக்கு அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. எனவே கூட்டம் உள்ள பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், தவிர்க்க முடியாத பட்சத்தில் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்றும் கூறியுள்ளோம். மேலும் கல்வி நிலையங்கள் மற்றும் திரையரங்குகளிலும் முககவசத்தை கட்டாயமாக்கியுள்ளோம்.

பாதிப்பின் வீரியம்

மேலும் கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கும் பாதிப்பின் வீரியம் சற்று அதிகமாக இருக்கும். சர்வதேச விமான நிலையங்களில் கண்காணிப்புகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால் நாங்கள் பெங்களூரு, மங்களூரு விமான நிலையங்களில் கண்காணிப்பை தொடங்கியுள்ளோம். நான் விரைவில் அங்கு நேரில் ஆய்வு செய்ய உள்ளேன். மேலும் அண்டை மாநிலங்களில் சர்வதேச விமான நிலையம் நமது எல்லைக்கு அருகில் இருந்தால் அங்கிருந்து வரும் பயணிகளை கண்காணிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்.

இவ்வாறு சுதாகர் கூறினார்.


Next Story