சித்ரதுர்கா மடாதிபதி மீதான பாலியல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்- மைசூரு தொண்டு நிறுவனம் வலியுறுத்தல்
சித்ரதுர்கா மடாதிபதி மீதான பாலியல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மைசூரு தொண்டு நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
பெங்களூரு: மைசூருவை சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனத்தின் இயக்குனரான ஸ்டான்லி கே.வர்கீஸ் நிருபர்களிடம் கூறியதாவது:- சித்ரதுர்கா முருக மடத்தின் மடாதியான சிவமூர்த்தி முருகா சரணரு, 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு இருக்கிறார். அந்த சிறுமிகள் முதலில் மைசூருவில் உள்ள ஒடநாடி தொண்டு நிறுவனத்தில் வந்து தான் தஞ்சம் அடைந்திருந்தார்கள். சித்ரதுர்கா மடாதிபதி மீது பாலியல் வழக்கு பதிவாக எங்களது தொண்டு நிறுவனமே காரணமாக இருந்தது. சித்ரதுர்கா மடாபதி மீதான பாலியல் வழக்கு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ஏனெனில் மடத்தில் இருந்த பல சிறுமிகள் காணாமல் போய் இருக்கின்றனர்.
இதுதொடா்பாக பத்திரிகைகள், தொலைக்காட்சிகளில் செய்திகள் வந்துள்ளது. பார்வையற்ற ஒரு முதியவரின் பேத்தியும் மடத்தில் இருந்து காணாமல் போய் இருக்கிறார். இதுதவிர இன்னும் 3 சிறுமிகள் காணாமல் போய் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கிறது. இந்த ஆதாரங்களின் அடிப்படையில் தான் சித்ரதுர்கா மடாதிபதி மீதான பாலியல் வழக்கு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று கூறுகிறேன். திருமணத்திற்கு பின்பும் சில பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர். இது மடாதிபதியின் ஆதரவுடன் நடந்திருக்கிறது. சில பெண்களுக்கு மடாதிபதி மூலமாக பண உதவியும் வழங்கப்பட்டுள்ளது.மடாதிபதிக்கு சாதகமாக சில செயல்களும் நடந்துள்ளது. இதற்கு மதம் மற்றும் அரசியல் சாயம் பூச விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.