பெண்ணை அடித்து கொன்ற மகன்; போலீஸ் வலைவீச்சு
குந்தாப்புரா அருகே பெண்ணை அடித்து கொன்ற மகனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மங்களூரு;
குடிபோதையில் தகராறு
உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா தாலுகா ஹலாடி அருகே கசாடி கரிமனே கிராமத்தை சேர்ந்தவர் பார்வதி. இவருக்கு கிருஷ்ணா நாயக் என்ற மகனும், ஸ்ரீமதி என்ற மகளும் உள்ளனர். கிருஷ்ணா நாயக், அளவுக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையாகி இருந்ததாக தெரிகிறது. இதனால் அவர் தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து தகராறு செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 18-ந்தேதியும் கிருஷ்ணாநாயக் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போதும் அவர் தாய் பார்வதியிடம் தகராறு செய்ததாக தெரிகிறது.
கொலை
அப்போது பார்வதி, கிருஷ்ணா நாயக்கை கண்டித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர், தாய் என்று கூட பார்க்காமல் பார்வதியை சரமாரியாக அடித்து, உதைத்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை, மகள் ஸ்ரீமதி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் குந்தாப்புரா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக அவர் மங்களூரு வென்லாக் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பார்வதி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஸ்ரீமதி, சங்கரநாராயணா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணா நாயக்கை வலைவீசி தேடி வருகிறார்கள்.