ஜனநாயகத்தை மாநில அரசு ஊழலாக்கி வருகிறது


ஜனநாயகத்தை மாநில அரசு ஊழலாக்கி வருகிறது
x
தினத்தந்தி 31 Oct 2022 12:15 AM IST (Updated: 31 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளிக்கு இனிப்புடன் பணம் வழங்கிய குற்றச்சாட்டில் ஜனநாயகத்தை மாநில அரசு ஊழலாக்கி வருகிறது என்று எச்.விஸ்வநாத் எம்.எல்.சி. தெரிவித்துள்ளார்.

மைசூரு:

எச்.விஸ்வநாத் எம்.எல்.சி.

பெங்களூரு விதான சவுதாவில் முதல்-மந்திரி அலுவலகத்தில் இருந்து பத்திரிகையாளர்களுக்கு தீபாவளிக்கு இனிப்புடன் பரிசாக ரூ.1 லட்சம் லஞ்சம் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலாவும் குற்றச்சாட்டு தெரிவித்தார்.இந்த நிலையில் பா.ஜனதா மூத்த தலைவரும், எம்.எல்.சி.யுமான எச்.விஸ்வநாத் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தனது அலுவலகத்தில் இருந்து பத்திரிகையாளர்களுக்கு தீபாவளிக்கு இனிப்புடன் பையில் ரூ.2 லட்சம் பணம் வைத்து கொடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. பத்திரிகையாளர்களின் பணி தரம் பார்த்து பணம் வழங்கப்பட்டுள்ளது. பணம் இருந்ததை பார்த்ததும் சில நேர்மையான பத்திரிக்கையாளர்கள் அதனை வாபஸ் கொடுத்துள்ளனர்.

பணம் கொடுத்து அவர்களை விலைக்கு வாங்க நினைப்பது செய்தித்துறைக்கு செய்த அவமானம். பத்திரிகையாளர்களுக்கு பரிசுப்பொருட்கள் வழங்குவது வழக்கம். ஆனால் கத்தை கத்தையாக பணம் கொடுப்பதை எங்கேயும் பார்க்கவில்லை.

விளக்கம் வேண்டும்

இதனால் கர்நாடக அரசு நாட்டின் ஜனநாயகத்தை ஊழலாக்கி வருகிறது. இது கண்டிக்கத்தக்கது. இந்த விவகாரம் தொடர்பாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை விளக்கம் அளிக்க வேண்டும். இது ஒருவேளை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு தெரியாமல் நடந்து இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நீண்ட அரசியல் பயணம் கொண்ட நான் பெங்களூரு உள்பட டெல்லி வரையிலான பத்திரிகையாளர்களுடன் தொடர்பில் இருக்கிறேன். அதன்படி அவர்களது அன்பை பெற்றுக்கொண்டிருக்கிறேன்.

ஆனால் எந்த காரணத்தை கொண்டு அவர்களுக்கு நான் பணம், பரிசுப்பொருட்களை வழங்கவில்லை. பத்திரிகையாளர்கள் பணம், பொருட்களுக்கு ஆசைப்படாமல் மக்களுக்காக பணியாற்ற வேண்டும். யார் தவறு செய்தாலும் அவர்களை சுட்டிக்காட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story