பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் ரெயில் முன் பாய்ந்து ஆசிரியர் தற்கொலை
ெபங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் ரெயில் முன் பாய்ந்து ஆசிரியர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
பெங்களூரு:
ஆசிரியர் தற்கொலை
பெங்களூரு சுதந்திர பூங்காவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் காலவரையற்ற போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதில் ராய்ச்சூர் மாவட்டம் சிந்தனூர் கிராமத்தை சேர்ந்த சங்கரப்பா (வயது 47) என்ற ஆசிரியரும் கலந்துகொண்டார். கடந்த 20-ந்தேதி முதல் அவர் போராட்டத்தில் பங்கேற்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் சிட்டி ரெயில் நிலையத்திற்கு வந்தார். நடைமேடையில் நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்த அவர், திடீரென்று ரெயில் முன்பு பாய்ந்தார். இதில் சங்கரப்பா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் ரெயில்வே போலீசார் விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், ஆசிரியர்கள் போராட்டத்தில் கலந்துகொள்ள வந்த சங்கரப்பா ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
கடிதம் சிக்கியது
மலும் சங்கரப்பா எழுதிய கடிதம் ஒன்றும் போலீசாரிடம் சிக்கி உள்ளது. அந்த கடிதத்தில், மண்டியாவை சேர்ந்த நந்தினி என்ற பெண்ணுக்கும், தனக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும், அவருக்கு ரூ.27 லட்சம் கடன் கொடுத்தது பற்றியும் குறிப்பிட்டிருந்தார். மேலும், ஆசிரியர்களின் நிலை குறித்தும், அவர்களுக்கு உரிய சலுகைகள் செய்து கொடுக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார்.
அந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் அதன்பேரில் விசாரணையை தொடங்கி உள்ளனர். கடிதத்தில் அவர் குறிப்பிட்டு இருந்த நந்தினி யார் என்றும், அவருக்கும், ஆசிரியர் தற்கொலை செய்து கொண்டதற்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் ஆசிரியர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.